பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தமது பெண்மக்களில் ஒருவரை மன்னருக்கு மணம் செய்து வைத்தார்.[1] செம்பி நாட்டு மறவர்கள், அவர்கள் சார்ந்துள்ள முக்குலத்தின் இன்னொரு பிரிவினரான அகமுடையாருடன் மணவினைகள் கொள்வது அன்றைய நிலையில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி அல்ல. ஆனால் சிவகங்கை அரசியலில் மன்னரது இந்த மறுமணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தான் சிவகங்கைச் சீமை வரலாற்றில் பிந்தைய பகுதி சுட்டிக் காட்டும் பேருண்மையாகும்.

மன்னருக்கு இந்தத் திருமணம் ஒரளவு மன ஆறுதலை அளித்தாலும், நாளடைவில் பெரும் சோதனையின் தொடக்கமாக மாறிவிட்டது. மன்னரது புதிய மாமனாரும் பிரதானியுமான பெரிய மருது சேர்வைக்காரரால் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், சின்னப் பிரதானியும், சின்ன மாமனாருமான சின்ன மருது சேர்வைக்காரரின் நடவடிக்கைகளினால் மன்னருக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கி.பி.1790-ல் கும்பெனியாரும் ஆற்காட்டு நவாப்பும் ராணி வேலு நாச்சியாருடன் சமரசம் செய்து வைத்த பொழுது அளித்த அறிவுரைகளை, அவர் பற்றி நிற்கவில்லை. அரசுரிமைக்கு முன்னர் அருகதையான குடும்ப உறவுகள் பலனற்று விடும்(Kingship knows nokinship) என்பது ஆங்கிலப் பழமொழி..ஆனால் சிவகங்கை அரசியலைப் பொறுத்தவரையில் குடும்ப உறவுகள் ஆட்சியுரிமையை விட அதிகமாக அதிகாரம் மிக்கதாக இருந்தது. இரு பிரதானிகளது மக்களும், ஆட்சியுரிமை அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இயங்கத் தொடங்கினர். தந்தையரைப் பின்பற்றுவது தனயர்களின் கடமைதானே!

சிவகங்கை மன்னரது நிலை இருதலைக் கொள்ளி போல இருந்தது. ஒருபுறம் ஆட்சிப் பொறுப்பு, மறுபுறம் முறித்துக் கொள்ள முடியாத சொந்தம். இந்த சூழ்நிலையில், அன்றாட அரசியல் பிரச்னைகளுக்கு எவ்விதம் தீர்வு காண்பது? கி.பி.1792 பிப்ரவரியில், சின்னமருது சேர்வைக்காரரது உத்திரவின் பேரில் சிவகங்கை படைகள் வடக்கே தொண்டமான் சீமைக்குள் புகுந்து கொள்ளையும் கொலையும் நடத்தியது.[2] புதுக்கோட்டை மானுவல் ஆசிரியர் மட்டுமல்லாமல் மதுரைச் சீமை வரலாறு எழுதியுள்ள நூலாசிரியரும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.[3] நல்ல வேளையாக கலெக்டரது தலையீட்டினால் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டைப் படை எடுப்பாக அல்லாமல் எல்லைத் தகராறாக முடிவு பெற்றது.

மன்னரைக் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளும் மருது சேர்வைக்காரரது தன்னிச்சையான முடிவுகள் மன்னருக்குத் தலைவலி


  1. Military Consultations. Vol. 154. dt. 16.11.1791. P: 5812
  2. Radhakrishna Iyer - General History of Pudukottai State (1931). P:191
  3. Nelson.J.H. - Manual of Madura Country (1868) Part IV. P. 113