பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

பார்வையையும் வரலாற்று ஆய்வாளர்களின் புகழ்ச்சியையும் பற்றி பிடித்தவாறு காலங்கடந்து நிற்கும். இதற்கு மாறாக, சுய நலம், சாதி அபிமானம் ஆகிய குறுகிய அளவுகோலைக் கொண்டு அளவீடு செய்வது நம்மைநாமே ஏமாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களையும் ஏமாற்ற முயல்வதைத் தவிர வேறு அல்ல.

இங்கே சிவகங்கை பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வது. இந்த வரலாற்றைத் தொடர்ந்து படிப்பதற்குத் துணையாக அமையும்.

பரங்கியரது பாசம்!

நெல்லைச் சீமை பாளையக்காரர்கள், அரியலூர், உடையார் பாளையம், பாளையக்காரர்கள், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களிடமிருந்து கப்பத் தொகையைப் பெறுவதற்கும், கம்மந்தான் கான் சாகிபுடன் புரட்சியை முடிப்பதற்கும், மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு சென்னையில் இருந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரது பாதுகாப்பு அணிகளை, கூலிப்படைகளாக, ஆற்காட்டு நவாப் முகம்மது அலி பயன்படுத்தினார். மற்றும் மைசூர் மன்னர் ஹைதர் அலியுடனான போர், பிரஞ்சுக்காரர்களுடனான மோதல் ஆகியவைகளுக்கும் ஆற்காட்டு நவாப், கும்பெனியாரது கூலிப்படைகளையே நம்பியிருக்க வேண்டிய பரிதாபநிலை. அதுவரை கர்நாடகப்பகுதியில் தங்களது வணிக நலன்களை விரிவு செய்து கொள்வதற்கு ஆற்காட்டு நவாப்பின் அதிகார வரம்பிற்குட்பட்ட சலுகைகளை, எதிர்பார்த்து இருந்த கும்பெனியார்களது துப்பாக்கிக் கரங்களை எதிர்பார்க்க வேண்டிய இழிநிலை. இதன் காரணமாக, ராணுவச் செலவுகளுக்காக கும்பெனியாருக்கு நவாப் கொடுக்க வேண்டிய லக்ஷக்கணக்கான பகோடா பணம் பாக்கியாக இருந்தது. இதனை வசூலிக்கும் முயற்சியில் கும்பெனியார் நவாப்புடன் இரு உடன்படிக்கைகளை கி.பி.1787-லும் 1792-லும் செய்து கொண்டனர்.[1]

இவைகளின்படி நவாப், கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்கோடா பணத்திற்குக் கூடுதலான தொகையை தவணை நாளுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தென்மாவட்ட பாளையக்காரர்கள் நவாப்பிற்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையான 2,64,704 ஸ்டார் பகோடா பணத்தையும், பாளையக்காரர்களிடமிருந்து நேரடியாக வசூலித்துக் கொள்ளும் அதிகாரத்தையும் பெற்றனர்.[2]


  1. Rajayyan. Dr.K. History of Madura (1974). P: 318.
  2. Ibid - P:325