பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

பிள்ளையின் திருவிளையாடலில் சிக்கியவர்கள் என்பதும் தெரியவந்தது. பேஷ்குஷ் இனத்தில், பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் செலுத்திய 18,500 பக்கோடா பணத்தையும் துபாஷ் ரங்கபிள்ளை ஏப்பமிட்டு இருந்தார்.[1] கும்பெனியாருக்குச் சேரவேண்டிய 22,285 பக்கோடா பணத்தை அவர் கையாடல் செய்திருப்பதை மட்டும் வசூலிக்க கும்பெனித் தலைமை முனைந்தது.[2] ஊழல் வேந்தன் காலின்ஸ் ஜாக்ஸனுக்குப் பதிலியாக கலெக்டர் பணியேற்ற ரம்போலா லூஷிங்டனுக்கு பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் மீதான சந்தேகம் வலுத்தது. கலெக்டர் ஜாக்சனிடம் சலுகைகள் பெறுவதற்கு பிரதானி இந்த பணத்தை கொடுத்து இருப்பாரோ என்பது லூஷிங்டனது ஐயம். அடுத்து, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையில் விசாரணையில் இருந்து தப்பிச் சென்ற பாஞ்சலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் 5.6.1799 தேதி அன்று சிவகங்கைச் சீமை பழமானேரியில் சின்ன மருது சேர்வைக்காரரைச் சந்தித்துப் பேசியது கலெக்டரது சந்தேகத்தை மிகுதிப்படுத்தியது.[3]தாம் பதவி ஏற்று நான்கு மாதங்களாகியும் பாளையக்காரர் என்ற முறையில் தம்மை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்காத பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் முந்தைய கலெக்டர் மீது கொண்டிருந்த அதே குரோத மனப்பான்மையுடன் இருப்பவர், சிவகங்கை சீமை பழமானேரி சென்று சிவகங்கைப் பிரதானியைச் சந்தித்தார் என்றால், அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது கலெக்டர் லூஷிங்டனது ஊகம். அந்த ஊகம் சரியானது என்பதை பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் புலப்படுத்தின.

கி.பி.1799 ஆம் ஆண்டின் தமிழகத்து அரசியல் வரைபடத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தால் தமிழக அரசியல் நிலையை அறிவதற்கு உதவுவதாக இருக்கும். வடக்கே செங்கல்பட்டு, நெல்லூர், ஜில்லாக்களை கி.பி.1781-ல் நவாப்பிடமிருந்து கும்பெனியர் பெற்று இருந்தனர். வடமேற்கே, சேலம், கோவை ஜில்லாக்களும், ஆற்காடு, திண்டுக்கல் சீமையையும், கி.பி.1792-ல் திப்புசுல்தானிடமிருந்து மூன்றாவது மைசூர் போரின் முடிவில் பறிக்கப்பட்டது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்கள். கி.பி.1792-ம் ஆண்டு உடன்படிக்கைப்படி பரங்கியரது வரிவசூலுக்கு கட்டுப்பட்டு இருந்தது. கி.பி.1795-ல் சேதுபதி மன்னரை சிறையில் தள்ளிவிட்டு மறவர் சீமை (இராமநாதபுரம் ஜில்லா) நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது - தஞ்சாவூர் மன்னருக்கும் கும்பெனியாருக்குமாக அர்த்த நாரீசுவர நிலையில் தஞ்சாவூர் சீமை இருந்து வந்தது.


  1. Military Consultations Vol.105(A) P.2513-14
  2. Military Consultations Vol. 95/9.7.1799. P: 1-104.
  3. Board of Revenue Consultations Vol.229/10,6, 1799, P. 4853 91