பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 121

இவ்விதம், தமிழகத்தின் அனைத்துப் பகுதியும் கும்பெனியாரது கையில். தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லாத தண்டல்காரனாக கும்பெனி நிர்வாகம் செயல்பட்டது. முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விஜயநகரப் பேரரசின் மேலாண்மையின் கீழ் இந்தப் பகுதிகளில் சிற்றரசர்களாக விளங்கிய பாளையக்காரர்களை, கும்பெனியார் மிகவும் மோசமாக நடத்தினர். பொன் முட்டையிடும் வாத்துக்களாக அவர்களை நினைத்து அவர்களையும் அவர்களது குடிகளையும் கசக்கிப் பிழிந்தனர்.[1] தங்களது கஜானாக்களை நிரப்பினர். இவர்களது முகவர்களான குத்தகைதாரர்களும், கணக்கப் பிள்ளைகளும் வசூல் பணியில் செய்து வந்துள்ள திருகுதாளங்களையும் கண்டு கொள்ளவில்லை.[2] பாளையக்காரர்களது செல்வாக்கை செல்லாக்காசாக்கும் வகையில் மக்களிடம் உள்ள செல்வாக்கையும் சலுகைகளையும் நீக்க முயன்றனர். ஆண்டுக்கொரு முறை விசேஷ காலங்களில் பாளையக்காரர்களுக்கு குடிகள் அளித்து வந்த காணிக்கைகளையும் கும்பெனியாரே பெற்றுக்கொண்டனர்.[3] தவணைகளில் இத்தொகையை செலுத்தாத பாளையக்காரர்களை நீக்கி தண்டித்தனர்.[4] பாரம்பரியமாக வந்த பாளையக்காரர் பரம்பரையினருக்குப் பதிலாக அவர்களுக்கு எதிரான பாளையக்காரரது பங்காளிகளை, புதிய பாளையக்காரர்களாக நியமனம் செய்தனர். பரங்கிகளுக்கு வேண்டியது பணம்தானே!

இதே போல, குடிகளையும் கொடுமைப்படுத்தி வந்தனர். பணம் செலுத்தாத குடிகளை காவலில் அடைத்து வைத்தனர். அவர்களது ஜீவனத்திற்கு ஒருமணி கூட இல்லாமல் அவர்களது தானியங்களை பலவந்தமாக எடுத்துச் சென்றனர். ஏன் பண்ட பாத்திரங்களைக் கூட விட்டு வைக்காமல் கைப்பற்றி சென்றனர்.[5] இவைகளைக் கேட்பதற்கு எந்த நிர்வாகமும் இந்த நாட்டில் இல்லை. உயர்ந்து கொண்டே சென்ற விலைவாசிகளையும் கட்டுப்படுத்தவும் இல்லை. வெறுப்பும் வெஞ்சினமும் மக்களிடம் வளர்ந்து வந்தது.

இவ்வளவு, இக்கட்டான நிலையில் வறட்சி மிகுந்தது. கி.பி.1794-ல் ஏற்பட்டதை தொடர்ந்து கி.பி.1788-ல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், பஞ்சம் பரந்து, படிந்து காணப்பட்டது. பஞ்சத்தின் பயங்கரமான பார்வையில் இருந்து தப்ப, மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேறினர்.[6]


  1. Board of Revenue Consultations Vol.2 (1.10, 1799] P:2-3
  2. Francis - Gazetteer of Madurai (1911) P: 186
  3. Secret Sundries - Vol.21 - P: 1080-81.
  4. Ibid - P: 1080 -81
  5. Ibid - P: 1045-48
  6. Secret Sundries - Vol.2:1. P: 1108-1110