பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

எஞ்சி இருந்த குடிகளும் பாளையக்காரர்களும், பரங்கியரை விரட்டி அடிக்க அதுதான் தக்க தருணமாகக் கருதினர். தமிழகத்தில் பல நூற்றாண்டுகாலமாக இருந்து வந்த பழைய சமூக அமைப்பை மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதை நிறுவுவது பற்றிச் சிந்தித்தனர். இந்த எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் கும்பெனியாரது கொடுமை மிகுந்து வளர்ந்தது.

ஏற்கனவே கிஸ்திப் பணம் கட்ட இயலாததற்காக துரத்தப்பட்ட சாப்டுர் பாளையக்காரர், கோம்பையா நாயக்கர்கள் போல இப்பொழுது கிஸ்தி கட்ட மறுத்த, பாஞ்சாலம் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன், தேவதானப்பட்டி பூஜாரி நாயக்கர் ஆகியோரையும் தூக்கில் ஏற்றினர். கட்டபொம்மனது பிரதானி சிவசுப்பிரமணிய பிள்ளையை, நாகலாபுரத்திலும், கட்ட பொம்மனது உறவினர் செளந்தரபாண்டியனை கோபாலபுரத்திலும் சிரச்சேதம் செய்தனர். கட்டபொம்மனது குடும்பத்தினரை பாளையங்கோட்டையிலும், பூந்தமல்லியிலும் சிறைவைத்தனர்.[1] கட்டபொம்மனது ஆதரவாளர்களான காடல்குடி, குளத்தூர், கோல்வார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, நாகலாபுரம், பாளையக்காரர்களது பாளையங்களை பறிமுதல் செய்தனர்.[2]அவர்களது கோட்டைகளை இடித்துவிட்டு அவர்களுக்கு பக்கபலமாக நின்று பாடுபட்ட எட்டையாபுரம், மயில்மாந்தை, மணியாச்சி, பாளையகாரர்களுக்கு அவர்களது பாளையங்களைப் பகிர்ந்தளித்தனர்.[3] இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கும்பெனியார் கொடுரமான முறையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். என்றாலும், இன்னும் மோசமான நிகழ்வுகள் காத்து இருக்கின்றன என்பதை அவர்களால் அப்பொழுது ஊகித்துக்கொள்ள முடியவில்லை. அடுப்பில் உள்ள பானையில் கொதிக்கின்ற பால் முழுவதும் சூடேற சூடேற ஆவியாகி மறைவதில்லையே! மாறாக, கொதிக்கும் பால் பாத்திரத்தின் விளிம்பைக் கடந்து, வழிந்து அதனை சூடேற்றி கொதிக்கச் செய்த அடுப்புத் தீயில் விழுந்து அதனை அணைக்கத்தானே முயற்சி செய்கிறது!

கும்பெனியாரதும், அவர்களது குத்தகைதாரர்களாலும் அட்டுழியங்களுக்கு ஆளாகிய விவசாயி, லஞ்ச லாவண்யத்தாலும், விலைவாசி உயர்வாலும், நடை பிணமாகிவிட்ட குடிமக்கள், பாரம்பரிய உரிமைகளையும், மக்களது பேராதரவையும் இழந்து தவித்த பாளையக்காரர்கள், பெருங்குடி மக்கள், இவர்கள் அனைவரும் கொதிக்கும் பாலைப்போல ஓரணியில் கிளர்ந்து எழுந்து நிற்கத் தொடங்கினர்.


  1. Revenue Consultations. Vol.98/9.11.1799. P: 2948-49
  2. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 356.
  3. Ibid - P: 356