பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

பாய்களை அலைக்கழிக்கும் காற்றின் சீற்றம் கப்பலைச் சுக்கு நூறாக சிதறடிக்க முற்படுவது போன்ற பெருமழை. பகல் இரவு வந்து போயிற்று. பயணம் தொடர்ந்தது.

"வழக்கமாக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, குடிநீர் அனைத்தும் காலியாகி விட்டன. பசி, தாகம், பயணக் களைப்பு, பயணிகள் புழுப் போல் துடித்தனர். என்று முடியும் இந்தப் பயணம்" என்று முடியும் இந்த இன்னலின் தொடர்ச்சி. பயணிகளில் மூவர் கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர். அந்தக் கப்பல் பயணத்தைவிட அவர்களது சாவு கொடுமையாக இருந்தது..."

எண்பது நாட்களுக்குப் பிறகு அவர்களது கப்பல் 25.4.1802 பினாங்கு தீவை அடைந்தது.[1]

மரண தண்டனையை விடப் பன்மடங்கு கொடுமையான தண்டனை இது. வாழ்நாளெல்லாம் தன்னந்தனியாக வாழ்வது. வாழ்ந்த நாட்களை எண்ணி நைந்து நலிந்து வருந்துவது! இந்தக் கொடுமைக்கு ஈடாக வேறு கொடுமை எதுவும் உலகில் இருக்கவே முடியாது! வேறு வழியில்லாமல் வேங்கன் பெரிய உடையாத் தேவரும் அவருடன் பயணத்தில் எஞ்சிய அறுபத்து எட்டு விடுதலை வீரர்களும் 1.5.1802 அந்த தீவிலே கால் எடுத்து வைத்தனர்.[2] பசுமையும் வளமையும் நிறைந்த அந்த தீவிலே கவலையும் வேதனையும் கலந்த இதயத்துடன் தமிழக வீரர்கள் நடமாடி வந்தனர். அவர்களது சஞ்சலம் கலந்த பெருமூச்சு வீசிய காற்றிலே கலந்து விரைந்தது.

"நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதைக் காண்ப தென்றே
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மியழுங்குரல்...
கேட்டிருப்பாய் காற்றே..."

என்று பின்னர் மகாகவி பாரதி பாடியது போன்று, இதயத்தில் நிறைந்த வேதனை, சஞ்சலம், நாட்டைப் பற்றி, வீட்டைப் பற்றிய கவலைகளினால் பீறிட்டுப் பெருக்கோடிய இரத்தக் கண்ணிரில் காட்சியளித்த சுதந்திர மனிதராக, சோகமே வடிவாக அங்கு நடமாடிய நாலரை மாதங்கள் சசிவர்ணப் பெரிய உடையாத் தேவரது வீரசாகசத்தின் விளைவாக உருவாகிய சிவகங்கைத் தன்னரசின் கடைசி மன்னர், சக்கந்தி முத்து விசய ரகுநாத வேங்கன் பெரிய உடையாத் தேவர் 19.9.1802-ம் தேதியன்று அங்கே காலமானார்.


  1. Military Consultations Vol. 304/4.11.1802/P: 7869-70
  2. Military Consultations Vol. 304/4. 11.1802/P: 7869-70