பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 157


இந்த மன்னரது இறப்பை விட இன்னும் கொடுமையானது அவரது குடும்பத்தினர் - மனைவிகளும், குழந்தைகளும், பணியாட்களுமாக ஐம்பது பேர் வறுமையிலேயே வாடி வதங்கியது. அவரது மனைவி ரெங்காத்தாள் என்பவர் கும்பெனி கலெக்டருக்கு கொடுத்த மனு ஒன்றில்,[1]

"... மருதப்ப சேர்வைக்காரர் சீமை நிர்வாகத்தை நடத்தியபொழுது எங்களது கணவர் பெயரளவில் தான் மன்னராக இருந்தார். மருது சேர்வைக்காரரது அடாவடித்தனம் காரணமாக அவரைத் தண்டித்ததுடன், தவறான தகவலினால், எங்களது கணவரை பென்கோலனுக்கு தளபதி அக்னியூ அனுப்பிவிட்டார். அவர்கள் அங்கிருக்கும்பொழுது. அவர்களுக்கு வழங்கப்பட்ட படித்தொகையில் இருந்து ஒரு பகுதியை அனுப்பி வைத்தார். சக்கந்தி ஜமீன்தாரான எங்கள் கணவரது சகோதரர் மகனும் எங்களுக்கு சிறிது காலம் வரை தான்ய தவசங்களும் கிடைக்குமாறு செய்தார்.


"துரைச்சாமியும், சடைமாயனும் தண்டனையிலிருந்து நாடு திரும்பியவுடன், அவர்களுக்கு அலவன்ஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. மனவருத்தம் காரணமாக, இறந்துபோன எங்களது கணவருக்குச் செய்ய வேண்டிய கருமங்களை, சிவகங்கை ஜமீன்தார் செய்யவில்லை. அவைகளைச் செய்வதற்கான வசதியும் எங்களிடம் இல்லை.

"சக்கந்தி ஜமீன்தார் எங்களுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார். எங்களது பராமரிப்பிற்கு அலவன்ஸ் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அல்லது நெருப்பில் பாய்ந்து எங்களது கஷ்ட ஜீவியத்தை முடித்துக்கொள்ள அனுமதிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம்."

இந்த வேண்டுகோளில் நாள் குறிப்பிடவில்லை. ஆதலின் எப்பொழுது இந்த மனு கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம் நெருப்பாகவும் நீராகவும் தானே துணை செய்ய முடியும் ஆதலால்தான் ரெங்கத்தாள் நாச்சியார் அவர்கள் கடைசியாக நெருப்பில் புகுந்து விடும் நாட்டத்தை தெரிவித்து இருக்கிறார்.

கணவனை இழந்து தீப்புகும் பெண்டிர்க்கு, தாமரைப் பொய்கையைப் போன்றது நெருப்பு என 'அரும்பு அற, இதழ் அவிழ்ந்த தாமரை, நன்


  1. Madura District Records Vol.4681/30. 1.1833. P:32-33