பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 159

இருந்த சிவகங்கை ஜமீன்தாரை இந்த அலவன்ஸ் தொகையை வழங்குமாறு கட்டளையிட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜமீன்தார், ஏற்கனவே மருது சேர்வைக்காரர் குடும்பத்திற்கு அலவன்ஸ் வழங்குவதைப் போல கும்பெனியாரே சிவகங்கை மன்னரது விதவைகளுக்கும் அலவன்ஸ் வழங்குதல் வேண்டும் என தெரிவித்து விட்டார்.[1] அடுத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பரிந்துரைக்கான காரணத்தை தெளிவாக விளக்க வேண்டும் என கலெக்டரை கும்பெனி தலைமை கோரியது.

இவ்விதம் கடிதப் போக்குவரத்து நீண்டதே தவிர நலிந்து வந்த மன்னர் குடும்பத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

இதிகாசம் பெருமைமிக்க புனித இராமேஸ்வரத்தின் அதிபதிகளாக விளங்கிய சேதுபதி மன்னர் கொடி வழியில் இருந்து பிரிந்த சிவகங்கைத் தன்னரசு மன்னர் கிளை தெய்வீக, ஆன்மிக அருஞ்செயல்களுக்கு அறக்கொடைகளை வழங்கி உடலும் உயிருமாக வாழ்ந்த இந்த உத்தமர்கள், உட்பகையினாலம் வெளிப்பகையினாலும் வீழ்த்தப்பட்டு வரலாற்றில் இருந்து மறைந்ததை நினைக்கும் உள்ளங்களில் வேதனைதான் எழுகின்றது.

விரைவாகவும், சீராகவும் சுழலும் காலச் சக்கரத்தை வழிநிறுத்துவதற்கு வரலாற்றுக்கு வலிமை ஏது? மாறாக திருமடங்களிலும், திருக்கோயில்களிலும் அன்ன சத்திரங்களிலும் தொடர்ந்து வரும் அவர்களது கட்டளைகள், நிபந்தனைகள் ஆகியவைகளில் தான் மறைந்து நிற்கும் அவர்களது காலத்தால் அழிக்கவொண்ணாத சுவடுகளைப் பார்க்க முடிகிறது.


  1. Welsh.J. Col. - Military Reminiscencs (1881) Vol.IP: 116, 117.