பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. சோழபுரத்திலிருந்து


இன்றைய சிவகங்கைக்கு வடக்கே பத்து கல் தொலைவில் உள்ளது சோழபுரம். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரை வென்று பாண்டிய மண்டலம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் வைத்து இருந்த சோழ பாண்டியர், இந்த ஊரை சோழர்களது ஆதிக்கத்தையும், பதுங்கி விட்ட பாண்டியரது வீரத்தையும் நினைவூட்ட நிர்மானித்தனர். இதே பெயரிலான ஊர்கள், கன்னியாகுமரி மாவட்டம், காமராசர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அமைந்துள்ளன. பரங்கியரது பரம எதிரியாக மாறிய சிவகங்கைப் பிரதானிகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை அரச மரபினரான படைமாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத் தேவரை, அறந்தாங்கி காட்டில் தேடிப் பிடித்து அழைத்து வந்தனர். புதுக்கோட்டைத் தொண்டைமானது தொள்ளாயிரம் வீரர்கள் புடை சூழ சோழபுரத்தில் 3.9.1801-ம் தேதியன்று அவருக்கு சிவகங்கை ஜமீன்தார் என்ற புதிய பட்டத்தைச் சூட்டினர்.[1] அப்பொழுது சிவகங்கைச் சீமை மன்னர் சக்கந்தி வேங்கண் பெரிய உடையாத் தேவர் இருந்தார். கும்பெனியாரும் அவரை கி.பி.1790-ல் மன்னராக அங்கீகரித்து இருந்தனர். ஆனால், அவர் மருது சேர்வைக்காரர்களது அணியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

நாலுகோட்டைப் பரம்பரையில் வந்த படைமாத்தூர் கெளரி வல்லபரை புறக்கணித்து விட்டு சிவகங்கையில் மருது சேர்வைக்காரர்கள், சர்வாதிகாரம் செய்கின்றனர் என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்கும், இதன் மூலம் ராஜ விசுவாசம் மிக்க சிவகங்கைக் குடிகளை புதிய ஜமீன்தார் அணியில் இணையுமாறு செய்து


  1. Welsh.J.Col. - Military Reminiscencs (1881) Vol.I. P. 116, 117