பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


மருது சேர்வைக்காரரர்களது மக்கள் அணியை பலவீனப்படுத்துவதும் கும்பெனியாரது திட்டம். அவர்கள் போட்ட கணக்கு சரியானது என்பதை பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் - காளையார் கோவில் போரில் வெற்றி, தனிமைப்படுத்தப்பட்ட மருது சகோதரர்களை கைது செய்து தூக்கில் தொங்கவிட்டது. சிவகங்கைத் தன்னரசு மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரை பினாங் தீவிற்கு நாடு கடத்தியது போன்றவைகள் நியாயப்படுத்தின.

இதைவிடப் பெரிய ரகசியத் திட்டம் ஒன்றையும் கும்பெனியார் வரைந்து வைத்து இருந்தனர். தமிழகத்தில் எஞ்சியிருந்த பாரம்பரிய தன்னாட்சி மன்னர்களை ஒழித்து, நாடு முழுவதும் ஆங்கிலப் பேரரசை நிறுவுவது, என்பதுதான் அந்த திட்டம்.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கொடூரமாக ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்துவதாகச் சொல்லி, சேதுபதி மன்னரை கி.பி.1795-ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேது நாட்டில் கும்பெனி நிர்வாகத்தைப் புகுத்தினர்.[1]

மன்னரது வாரிசான அவருக்கு ஒரு மகள் (சிவகாமி நாச்சியார்) இருந்தும், மன்னரது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியாரை சரியான வாரிசு என பிரசித்தம் செய்தனர். அவரிடம் விரைவில் அரசை ஒப்படைத்து விடுவோம் எனப் பொய்யுரைத்து விட்டு எட்டு ஆண்டுகள் அவர்களது நேரடி ஆட்சியை அங்கு நடத்தினர். பிறகு, மறவர் சீமையின் தன்னரசு நிலையை நீக்கிவிட்டு கி.பி.1803-ல் இராமநாதபுரம் தன்னரசை ஜமீன்தாரி என அறிவித்தனர்.[2]

அப்பொழுது தஞ்சையில் இருந்த மன்னர் இரண்டாவது சரபோஜியைப் பலவந்தப்படுத்தி ஆட்சியுரிமையைப் பறித்தனர். பின்னர் அந்த மன்னர் நாட்டு நலன்கருதி, தஞ்சையை தங்களிடம் ஒப்படைத்து விட்டார் என்று புனை உரை கூறி தஞ்சை அரசைத் தங்களது உடமையாக்கினர்.[3]

அடுத்து, தமிழ் நாட்டில் எஞ்சி இருந்தது சிவகங்கை தன்னரசு ஒன்று மட்டுமே. அதுவும் தன்னரசு நிலையை இழந்து விட்டது என்பதைக் குறிப்பதுதான் சோழபுரத்தில் படைமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கு ஜமீன்தார் பட்டம் சூட்டியது.

கும்பெனியாரது இந்த இரகசியத் திட்டத்தை அன்று எத்தனை பேர்புரிந்து இருந்தனர்? புரிந்து இருந்தாலும், அவர்களால் என்ன செய்ய முடியும்? வெற்றிக் களிப்பில் வெறிபிடித்து ஓடிவரும் காட்டானையை பிடித்து


  1. Raja Ram Rao.T. - Manual of Ramnad Samasthanam (1891) P: 252 178.
  2. Ibid - P: 258
  3. Baliga.B.B. - Thanjavur District Hand Book. P: 82, 83