பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


நிறுத்துவதற்கு திறமைசாலி வேண்டுமல்லவா? ஒருவருமே இல்லை! கும்பெனியாரை எதிர்த்துப் போரிட்ட மதுரை சீமை அதிபர் கம்மந்தான் கான் சாகிபை, துரோகிகள் மூலம் பிடித்து கி.பி.1764-ல் தூக்கில் ஏற்றினர். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தோற்று ஒடிய கட்டபொம்மனுக்கும் அதே கதி. கி.பி. 1794-ல் கும்பெனியாருக்கு கப்பம் செலுத்த தவறிய சாப்டூர் பாளையக்காரரும் தூக்கில்தான் தொங்கினார். சேது நாட்டில், கும்பெனியாரது ஆதிக்கமும் எந்த உருவிலும் செயலிலும் காலூன்றிவிடக் கூடாது என மிகவும் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு மரண அடி கொடுக்க முயன்ற இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை வஞ்சகமாக கைது செய்து வாழ்நாள் முழுவதையும் சிறையிலே கழித்து இறக்குமாறு செய்தனர்.[1] அவர்களை எதிர்த்து மக்களை திரட்டி சேதுபதி சீமையின் தென்பகுதி முழுவதிலும் நாற்பத்து ஒரு நாட்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியையும், அசுரத்தனமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதனைத் தலைமை ஏற்று நடத்திய சிங்கன்செட்டி, மீனங்குடி கனக சபாபதித் தேவர், முத்துக்கருப்ப பிள்ளை, சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை ஆகியோருக்கும் மரண தண்டனை, எஞ்சிய ஆங்கில எதிர்ப்பாளர்களான ராஜசிங்க மங்கலம் குமரத் தேவர், காடல்குடி பாளையக்காரர் கீர்த்தி வீரநாயக்கர், மருது சேர்வைக்காரர்கள், அவர்களது மக்கள் அனைவருக்கும் துக்குத் தண்டனைப் பரிசு.[2]

காலத்தின் வேக சக்கரத்தை பற்றிப் பிடித்து பின்னோக்கி செலுத்த யாரால்தான் முடியும்? அது, நமது நாட்டின் தலை விதியைச் சீரழித்து, நாட்டின் நிகழ்வுகளை பயனற்று பலவீனமடையச் செய்தது.

படைமாத்துார் கெளரி வல்லபத் தேவர் ஜமீன்தார் ஆக்கப்பட்டாரே தவிர, அவரது முறையான நிர்வாகம் இயங்குவதற்கு காலதாமதமானது. மதுரைச் சீமையின் நிலத் தீர்வை முறையை ஆழமாக ஆராய்ந்து, நிரந்தரமான நிலவரித் திட்டம் ஒன்றை தமிழகம் எங்கும் புகுத்த கும்பெனியார் முயன்றதே இந்த தாமதத்திற்கு காரணமாகும். ஏற்கனவே கும்பெனி கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் வங்காளத்தின் இந்த நிலவரி முறையை கி.பி. 1793-ல் அமுல்படுத்தி இருந்தார். அதன்படி ஆண்டுதோறும், நிலவரித் தீர்வையாக சிவகங்கை ஜமீன்தார் கும்பெனியாரது குழுமத்திற்கு எவ்வளவு செலுத்த வேண்டுமென்பதை நிகுதி செய்தனர். அதற்கான "சன்னது" ஒன்றை கி.பி. 1803-ல் சிவகங்கை ஜமீன்தாருக்கு வழங்கினர். அன்று ஆட்சி மொழியாக இருந்த பாரசீக மொழி வழக்கில் அது "மில்கியத் இஸ்திமிரார்" என வழங்கப்பட்டது.


  1. கமால். Dr. S.M. - விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987)
  2. கமால். Dr. S.M._மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 283, 184