பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 165

தன்னரசு, சிற்றரசு என்ற பாரம்பரிய அரசு முறைகளுக்கு புறம்பானது இந்தப் புதிய நிலக்கிழார்முறை என்றாலும், கால மாற்றத்தின் காரணமாக இங்குள்ள அரச வழியினர் தங்களது சமூக அந்தஸ்தை ஒரளவு பேணிக் கொள்வதற்கு இந்த ஜமீன்தார் பதவியை விட்டாலும் வேறு வழி இல்லை என்ற நிலை. சமுதாயப் பணிகள் செய்வதற்கான வாய்ப்பும் அவருக்கு மிகவும் குறைவு. குற்றங்களுக்கு நியாயம் வழங்கும் உரிமையும் அறவே இல்லாதது. கி.பி.1801-ல் சோழபுரத்தில் தொடங்கிய இந்த முறை நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடித்து கி.பி.1949-ல் சிவகங்கையில் முடிவடைந்தது.[1]

சிவகங்கை ஜமீன்தாரியின் முதலாவது ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவர், கி.பி.1829 வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலம் அமைதியாகக் கழிந்தது. தங்களுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக போராட்ட உணர்வினை ஊக்குவிக்கும் மையங்களாக கோட்டைகள் உதவக்கூடாது என்பதற்காக மக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மன்னர்களது தற்காப்பு நிலையங்களாக பல நூற்றாண்டுகளாக விளங்கிய கோட்டைகளையும், கொத்தளங்களையும் இடிக்குமாறு உத்திரவிட்டனர்.[2] சிவகங்கைச் சீமை முழுவதும் மக்களிடத்தில் எஞ்சியுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கான பணியினை வைகுந்தம் பிள்ளை என்பவர் மேற்கொண்டார்.[3]

கீழே கண்டுள்ள ஆயுதங்கள் சிவகங்கைச் சீமை மக்களிடமிருந்து, 31.3.1802 வரை பறிமுதல் செய்யப்பட்டு, இராமநாதபுரம், மதுரை கோட்டைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை அழிக்கப்பட்டன.

1. துப்பாக்கிகள் 2096
2. மருந்து நிறைத்து சுடும்
துப்பாக்கிகள்
1229
3. வேல், ஈட்டிகள் 3640
4. கைத்துப்பாக்கிகள் 42
5. வாள்கள் 652
6. குறுவாள் 441
7. ஜிங்கால் 17
8. ஸ்ரோஜன் 90
9. துப்பாக்கி சனியன்கள் 91
மொத்தம் 8,298.

  1. Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari Scttlemcnt Act. 1948)
  2. Madura Dist. Rccords, Vol. 1146/1.9.1803. P:34 184.
  3. Madura Dist. Records. Vol. I 178(A)/17, 5, 1802, P: 354