பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

ஆனால், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளின் விளை நிலங்கள், பாசன வசதி, மண்ணின் விளைச்சல் திறன் வரி விதிப்பு முறை, ஆகியவகளை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், சிவகங்கை ஜமீன்தார் என்ற அதிகார பூர்வமான சன்னது படைமாத்தூர் கெளரி வல்லப உடையாத் தேவருக்கு கி.பி.1803-ல் வழங்கப்பட்டது. இந்த சன்னது "மில்கி-யத்-இஸ்திமிரார்" என பார்சி மொழியில் வழங்கப்பட்டது. அப்பொழுது இத்தகைய சன்னதுகள் மதுரைச் சீமையில் உள்ள சாப்டுர், திருநெல்வேலிச் சீமை எட்டையாபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி பாரியூர், தலைவன் கோட்டை, கடம்பூர், பனைவேலி, கொல்லாபட்டி, ஏழுமாடி, அழகாபுரி, நடுவன்குறிச்சி, மணியாச்சி, சுரண்டை, மேல்மாந்தை, ஆத்தங்கரை, சுண்டையூர், ஊர்க்காடு, சிங்கம்பட்டி, மன்னர் கோட்டை, ஆவுடையாபுரம், சாத்தூர், கொல்லங்கொண்டான் ஆகிய பாளையக்காரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த சன்னது வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி கலைக்டர் கச்சேரியில் 1803, ஜூலை மாதம் நடைபெற்றது.[1]

இந்த சன்னது என்ற பட்டயத்தில், சிவகங்கை ஜமீன்தாரின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஊர்கள், இனாம் கிராமங்கள், ஏந்தல்கள், புஞ்சை, நஞ்சை நிலங்களின் மொத்த பரப்பு, இந்த நிலங்களின் வகைப்பாட்டிற்கு தக்கபடி வசூலிக்க வேண்டிய தீர்வை விகிதம், அந்த தீர்வை வசூல் பணத்தில் கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய கிஸ்திப் பணம் என்ற நிர்ணயத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தன. இதற்கான ஆண்டு முறை விவசாய காலத்தை அடிப்படையாக கணக்கிட்டு பசலி எனப்பட்டது. அதாவது ஆங்கில பஞ்சாங்க முறையில் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் எதிர்வரும் ஆண்டின் ஜூன் மாதம் 30 ந் தேதி வரையான காலமாகும். இந்த ஒரு பசலி ஆண்டிற்கு சிவகங்கை ஜமீன்தார் கும்பெனியாருக்கு செலுத்தக் கடமைப்பட்ட தொகை, 1,25,626 ஸ்டார் பகோடா பணமாகும். இதற்கு கிஸ்தி என்று பெயர். அப்பொழுது சிவகங்கை ஜமீன்தாரியான 151 சதுர மைல் பரப்பில், அமைந்து இருந்த 1937 ஊர்க்குடிகளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட மொத்த வசூல் தொகையில் ஐந்தில் மூன்று பகுதியாக இந்தத் தொகை கருதப்பட்டது.[2]

ஜமீன்தாருக்கும் குடிமக்களுக்கும் அப்பொழுது ஜமீன்தாரி முறையில் இருந்த ஒரே தொடர்பு விளைச்சலில் இருந்து குடிகள் ஜமீன்தாருக்கு தீர்வை செலுத்துவதும் ஜமீன்தார் அதனைப் பெறுவதும் என்ற நிலையில்தான் புதிய நிலச் சுவான்தாரும் அவரது குடிகளும் இருந்து வந்தனர்.

"வரப்புயர நீர்உயரும்
நீர்உயர நெல் உயரும்
நெல்உயரக் கோல் உயரும்
கோல் உயரக் குடி உயரும்"


  1. Court Records Appeal No.20/1887
  2. Macleairs Manual of Madras Administration