பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


இந்த பணவரிகளைச் செலுத்த கும்பெனியாரது பகோடா, உள்நாட்டு பூவாரகன் குழிப்பணம், சல்லிப் பணம் என்ற நாணயங்கள் செலாவணியில் இருந்தன. சில ஆவணங்களில் இந்த வகைப் பணம் சுழிப்பணம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வெள்ளி, செப்பு உலோகங்களில் அச்சிடுவதற்கு மரக்கட்டைகளில் அமைக்கப்பட்ட அச்சுகள் பயன்பட்டதால் குழிப்பணம் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இந்த நாணயங்களைத்தயாரிக்கசிவகங்கை நகரில் அஃக சாலை என்ற நாணயச் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த வசூல் பணிக்கு ஜமீன்தாரது சேவையில் சம்பிரிதி, கணக்கர், காவல்காரர், என்ற பணியாளர்கள் இருந்தனர். கிராமக் கணக்கர் பதிவேடுகளை, ஆண்டுதோறும் ஜமீன்தார்களது அலுவலர் ஆண்டுதோறும் தணிக்கை செய்து வந்தனர். இந்த தணிக்கைக்கு ஜமாபந்தி என்று பெயர். ஜமீனில் உள்ள மொத்த கிராமங்களின் வசூல் சம்பந்தப்பட்ட பதிவுகளை, ஜில்லாக் கலெக்டர் ஜமாபந்தி செய்வார். இந்த ஜமாபத்தி இன்றும் வருவாய்த் துறையில் சற்று மாறுதலுடன் ஆண்டு தோறும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஜூன் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

இத்தகைய தீர்வை வசூலினின்றும் வேறுபட்ட நிலத் தொகுப்புகள் இந்த ஜமீன்தாரியில் இருந்தன. அவை இனாம் நிலங்கள் அல்லது கிராமங்கள் எனப்பட்டன. பாண்டியர்கள் சோழர்கள், நாயக்க மன்னர்கள், மாவலி வாணாதிராயர்கள், சேதுபதிகள், ஆற்காட்டு நவாப் ஆகியோர் ஆட்சியில் இந்தச் சீமையில் தனியாருக்கும் திருக்கோயில், திருமடங்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் என்ற அறப்பணிகளுக்கு சர்வ மானியமாக வழங்கியவை அவை, போர் வீரர், புலவர், பண்டிதர், அவதானி, போன்ற தனியார்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள் ஜீவிதம் எனப்பட்டது. மேலும் வேத விற்பன்னர்கள், வியாகரனப் பண்டிதர்கள், ஆகியோருக்கு அளிக்கப்பட்டவை தர்மாசனம் என்றும் சுமிருதி வல்லவர்களுக்கு வழங்கப்பட்டவை சுரோத்திரியம், வித்தியார்த்திகளுக்கு வழங்கப்பட்டவை பட்டவர்த்தி என்றும் வழங்கப்பட்டன. இந்த அறக்கொடைகள் சமுதாயத்தின் நலன்களுக்காக நிறுவப்பட்டவை என்ற அடிப்படையில், அந்தப் பணிகள் தொடர்ந்து மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற பெருநோக்கில், தீர்வையின் சுமையால் இவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அந்தக் அறக்கொடைகளைப் பரிபாலிப்பவர்களிடமிருந்து அறக்கொடையான நிலங்கள், அல்லது கிராமங்களுக்கு பொருப்பு அல்லது குயிட்ரெண்ட் என்ற மொத்த தொகை மட்டும் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டது. இவற்றை விடுத்து சாயர் என்ற சில்லரை வரவினங்களும் ஜமீன்தாருக்குரியதாக இருந்தன. அதாவது பேட்டைகளில் வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் சுங்கம், நீர்