பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவகங்கைச் சீமையின்
சீரிய தமிழ்க்காசு

சசிவர்ணத் தேவர் காலத்தில் வெளியிட்ட ஒரு தாமிர பட்டயத்தின் மூலம் சிவகங்கையில் அக்கசாலை (நாணய சாலை) செயல்பட்டதைப் பற்றி அறிய முடிகிறது. அந்த அக்கசாலையில் எந்த வித நாணயம் வெளியிடப்பட்டது என்று அறிந்து கொள்ளச் சான்றாக சிவகங்கையில் இரண்டு செம்புக் காசுகள் கிடைத்துள்ளன. இந்தக் காசு, சசிவர்ணத் தேவர் சிவகங்கைச் சீமைக்கு மன்னரானவுடன், மக்களின் புழக்கத்திற்காக வெளியிட்டிருக்கலாம். செம்புக் காசின் முன் பக்கத்தில், ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. லிங்கத்திற்கு அழகூட்ட, இதன் மேல் பகுதியில் ஒரு தொடர் மாலை போடப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் தமிழில் 'சசிவறனன' என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசிலிங்கம் காணப்படுவதால் மன்னர் சிறந்த சிவ ஞான பக்தராக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சிவகங்கைச் சீமையைத் தோற்றுவித்தவர் சசிவர்ணத் தேவரே ஆகும். இந்தக் காசிலிருந்து மன்னன் பெயர், சமயம், வணங்கிய தெய்வம், தமிழ் எழுத்தின் வளர்ச்சி ஆகிய பல அரிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

தகவல் அளக்குடி ஆறுமுக சீதாராமன்,
தஞ்சை-7.

ΧΧΙΙ