பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தொழிற்புரட்சியின் காரணமாக மேற்கு நாடுகள் தொழில் மயமாகியும், நம் நாட்டு மக்கள் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் இருந்து வந்தனர். வறுமைக்கு மூல காரணமாக இது அமைந்துள்ளது என கி.பி. 1830-ல் அரசினரால் ஏற்படுத்தப்பட்ட "பஞ்ச ஆய்வுக் குழுவில்" கண்டுள்ளது.[1] அத்துடன் விவசாய உற்பத்தி முறைகளில் மாற்றம் இல்லை. விவசாயத்திற்கு ஆதாரமாக, முந்தைய அரசுகள் அமைத்த கண்மாய்களும் கால்வாய்களும் நூற்றாண்டுகள் பலவற்றைக் கண்ட நிலையில் அப்படியே பழுதான நிலையில் இருந்தன. விவசாயத்திற்கு கொண்டு வரத்தக்க கன்னி நிலங்கள் தொடர்ந்து தரிசாகக் கிடந்தன. இவைகளைச் சீர்திருத்தம் செய்து விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்ற குடிமக்களிடம் மனம் இருந்தாலும் அவர்கள் கையில் பணம் இல்லை என (இந்திய அரசு செயலர் சர். ஜேம்ஸ் கைர்டு அவர்களது 31.10.1879-ந் தேதி அறிக்கை) தெளிவுப்படுத்தி இருக்கிறது. இவைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.

மறுபுறம் இந்திய அரசு, கும்பெனியாரது வியாபார நலன்களுக்கும் ராணுவ இயக்கத்திற்கும் ஏற்ற துறைகளில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்தது. குறிப்பாக 1900-ல் புதிய ரயில் பாதைகள் அமைக்கச் செலவழித்த 225 மில்லியன் பவுண்டுகள் கால்வாய்களைச் செப்பனிடச் செலவழித்தது இருபத்து ஐந்து மில்லியன் பவுண்டு அதாவது ஒன்பதில் ஒரு பகுதி. பட்டினியும் பசியுமாக பாடுபடும் விவசாயிகளைப் பற்றி சிறிதும் அக்கரை கொள்ளவில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.[2] ஜமீன்தாரிமுறை மக்களது வாழ்க்கையில் வளம் சேர்க்கவில்லை. மாறாக வறுமையை வளர்த்தது. வாழ்வதற்கு வழியில்லாமல், ஜமீன்தாருக்கு தீர்வை பாக்கி செலத்த முடியாத நிலையில் மக்கள் கூட்டம் சிவகங்கைச் சீமையை விட்டு வெளியேறி தொண்டமான் சீமை, சோழ சீமைக்குச் சென்றது மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா ஆகிய நாட்டிற்கு சென்றனர் என்று சிவகங்கைச் சீமை பற்றிய தஞ்சை சரசுவதி மகால் நூலகச் சுவடி ஒன்று தெரிவிக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிளர்ந்து எழுந்த சிவகங்கைச் சீமை மக்களது ஆவேசத்தை அடக்கி தங்களது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய மூடு திரைதான் இந்த ஜமீன்தாரி முறை. ஜமீன்தாருக்கோ குடிகளுக்கோ இதனால் பலன் கிட்டவில்லையென்றாலும், கும்பெனியார் ஒரு நூற்றாண்டிற்கு மேல் கோடி கோடியாக பணம் குவிப்பதற்கு இந்த அமைப்பு உதவியது என்பதில் ஐயமில்லை.


  1. First Report of Famine Commission (1880)
  2. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக பதிவேடு