பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 195


கைக் கொள்ளுமாறு செய்தார். அத்துடன் இளையான்குடியில் கிராம விவசாயிகள் மாநாடு ஒன்றினையும் கூட்டினார். இந்த மாநாட்டிற்கு ஆச்சார்யா.என்.ஜி. ரெங்கா தலைமை தாங்கினார்.

இதனை தொடர்ந்து கி.பி.1938-ல் இளையான்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது முயற்சியில் அரசியல் மாநாடு ஒன்றும் கூட்டப் பெற்றது. கதர் நூற்பில் விரைவாகவும் கூடுதலாகவும் நூற்கும் முறையில் புதிய அம்பர்சர்க்காகண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து, இளையான்குடி பாட்சா ராவுத்தர் என்பவர் தமது சொந்த செலவில் கோவைக்கு நெசவாளி ஒருவரை அனுப்பிவைத்து அம்பர்சர்க்காவில் பயிற்சி பெறச்செய்யுமாறு உதவி, அவர் மூலம் அந்த வட்டார மக்களுக்கு அம்பர் சர்க்கா பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்தார். தேவகோட்டையில் காங்கிரஸ் தொண்டர்களது மாநாடும் இந்த ஆண்டில் நடத்தப்பெற்றது.

1939-ம் வருடம் ஜெர்மன் நாட்டு பாசிஸ்ட் சர்வாதிகாரி ஹிட்லர் பக்கத்து நாடான போலந்து நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதுடன் விரைவில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளையும் பிடித்தது, இங்கிலாந்து ஜெர்மனி நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தது. தனது அணியில் அமெரிக்க ஆஸ்திரேலிய அரசுகளையும் இணைத்துக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் இந்திய அரசுப் பிரதிநிதியான வைஸ்ராய், இந்தியாவும், இங்கிலாந்தின் அங்கம் என்ற முறையில் அந்த இரண்டாவது உலகப் போரில் இணைந்து விட்டதாக அறிவிக்கும் சில போர்க் கால நடவடிக்கைகளை 24.9.1939-ல் அறிவித்தார். போர்க்கால நடவடிக்கைகளைச் செம்மையாக செயல்படுத்த இந்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தினார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் அப்பொழுது இயங்கி வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயலிழக்கச் செய்தார்.

இதனைக் கண்டித்து இந்திய தேசியக் காங்கிரஸின் அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. ஆத்திரமடைந்த மக்களையும் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் செய்த பாட்டாளிகளையும் அரசாங்கம் சிறைகளில் அடைத்தனர். காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். சிவகங்கைச் சீமையெங்கும் 1940-41-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி.புதுார் பொ.சுப்பிரமணியன், சிவகங்கை கே.இராமசாமி, பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன், மிளகனூர் சாமியார் என்ற இராமசாமி, மானாமதுரை காசி, திருப்புவனம் அயோத்தி வில்லாயுதம், ஒரியூர் சொக்கலிங்கம் அம்பலம், காரைக்குடி அபிசினியா நாச்சியப்பன், தேவகோட்டை டி.ஆர்.அருணாசலம் ஆகியோர். "வங்கியில் பணம் போடாதே, பட்டாளத்தில் சேராதே, யுத்த நிதிக்கு பணம் கொடுக்காதே" என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதனால் பீதியடைந்த ஆங்கில அரசு மக்களது தலைவர்களான இந்திய