பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


முற்றுகையில் இருந்து ராணியைக் காப்பாற்ற நவாப்பின் பரிந்துரையின் பேரில் கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்ட் தலைமையிலான படைகள் சிவகங்கை வந்து, கொல்லங்குடி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் மருது சேர்வைக்காரர்களை தோற்கடித்தன. திண்டுக்கல் சீமைக்கு ஒடிச்சென்ற அவர்கள், 1789-ல் திருப்புத்துர் கோட்டையை மீண்டு கைப்பற்றினர். மேலும் ரத்தக்களரியைத் தடுத்து சிவகங்கைச் சீமையில் அமைதியை நிலைநாட்ட ஆற்காட்டு நவாப்பும், கும்பெனித் தலைமையும் பிரதானிகளுடன் பேசி சமரச உடன்பாட்டினை எட்டுகின்றனர்.

இதன்வழி, ராணி வேலுநாச்சியார், அரசி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதென்றும், சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராக பதவி ஏற்பதெனவும் முடிவாயிற்று. கி.பி.1790 முதல் கி.பி.1801 வரை அவர்தான் சிவகங்கைத் தன்னரசின் மன்னராக இருந்தார். (பார்க்க தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பக தொகுதிகள்:)

சிவகங்கை சீமை அம்மானையோ இந்த முக்கியமான நிகழ்ச்சியை மிகவும் இயல்பாக, உண்மைக்கு மாற்றமாக,

"மங்கையந்தராணி மகாராணி வேலுலகு
தங்க கனமருது துரை வேந்தை தானழைத்து
மிக்க புகழ் விளம்புகிறேன் இப்போது
சக்கந்தி மாநகரந் தன்னில் குடி வளரும்
வெங்கணப் பெரிவுடையார் வேந்தனுக்கு வாந்தகமாய்
தங்கமுடி மகுடம் தரிக்க என்றாள் அப்பொழுது....
வைத்தார் முடியெடுத்து மங்கையருமே கொடுக்க" (பக்கம் 164)

என்று ராணி வேலுநாச்சியார் வேங்கன் பெரிய உடையாத் தேவருக்கு முடிசூட்டியதாக வரலாற்றிற்கு முரணான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் படைமாத்துர் கெளரி வல்லப ஒய்யாத் தேவர் கும்பெனியாருக்கு வரைந்த முறையீட்டில், அவருக்கு காளையார் கோவிலில் ஏற்கனவே சிவகங்கை மன்னராக முடிசூட்டப்பட்டதை தெரிவித்துள்ளார். (பார்க்க சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம்: Military consultantions Vol.285. (A) 28.6.1801 - Page 5039)

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான, ஆனால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய பகுதி, ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்கும் இருந்த தொடர்பைக் குறிப்பிடும் பகுதியாகும். அம்மானையில் பல இடங்களில் ராணியாரை