பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

நவாப் என்று யாரும் இருந்தது கிடையாது. 25.6.1772-ல் சிவகங்கையைக் கைப்பற்றிய நவாப், தொடர்ந்து அதனை எட்டு ஆண்டுகள் அவரது நேரடி நிர்வாகத்தில் வைத்து இருந்தார். கி.பி.1780-ல் ராணி வேலு நாச்சியார் தலைமையில் மருது சகோதரரர்கள் சீமையை மீட்கும் வரை. இதற்கு முரணாக உள்ளது மேலே கண்டவைகள்.

(ஈ) பக்கம் 99

"...அப்போது கி.பி.1780 கர்ப்பவதியாக இருந்த வேலு நாச்சிக்குப் பிறக்கவிருந்த சிவகங்கை வாரிசு ஆணா அல்லது பெண்ணா என்பது தெரியாமல் இருந்ததால்... அவள் பட்டத்து ராணியாக்கப்பட்டாள்.'

இராணி வேலுநாச்சியாரது கணவர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772-ல் இறந்த பிறகு பிரதானி தாண்டவராயபிள்ளை வேலுநாச்சியாரையும் அவரது மகள் வெள்ளச்சியையும் அழைத்துக்கொண்டு விருப்பாச்சி சென்றார் என்பது வரலாறு. (சிவகங்கைச் சீமை நூலில் பக்கம் 96-ல் இதே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்) ஆனால் கணவனை இழந்த வேலு நாச்சியார் கி.பி.1780-ல் சிவகங்கை வந்த பொழுது 'கர்ப்பவதியாக இருந்தார் என்பது ஆதாரமற்றது. சிவகங்கை ராணியாருக்கு இழுக்கை ஏற்படுத்துவது.

ராணி உண்மையில் கர்ப்பவதியாக இருந்தார் என்றால் அவர் என்ன குழந்தையை எப்பொழுது பிரசவித்தார் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கி.பி.1801 வரை சிவகங்கை வரலாற்றை விவரித்துள்ள அவர், ராணியாரது வாரிசை ஏன் குறிப்பிடவில்லை. வேண்டுமென்றே கைம்மை நிலையில் எட்டு ஆண்டுகளைக் கழித்த ராணி வேலு நாச்சியாருக்கு களங்கம் கற்பிப்பதற்காகவே ஆசிரியர் இதனை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.

தொடர்ந்து இந்த நூலின் ஆசிரியர், அவரது நூலின் பக்கம் 106-ல் 'முத்து வடுகநாதரின் முதல் மனைவி வேலு நாச்சியாருக்கும் வெள்ளை மருதுவுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது' என எவ்வித ஆதாரமும் இல்லாமல் பகிரங்கமாகக் குறிப்பிட்டு இருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. வாய்புளித்ததோ, காய் புளித்ததோ என்ற பாணியில் பொறுப்பற்ற முறையிலான எழுத்து, இந்த ஆசிரியருடையது.

4. வீராங்கனை வேலு நாச்சியார் (1983)

ஆசிரியர்: சிரஞ்சீவி

பதிப்பு : அபிராமி பப்ளிகேஷன்ஸ், சென்னை-1.

தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் வரையப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டு சிவகங்கைச் சீமை வரலாற்றை தக்க