பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 211

பலத்தை திரட்டி நாடெங்கும் புரட்சித் தீயைப் புடம் போட்டுக் கொளுத்தியவர்கள். இத்தகைய இணையற்ற உத்தமர்களின் ஓவியத்தை இதைவிட தமிழில் சித்தரிக்க முடியாது. தாய் நாட்டுப் பற்றும் வரலாற்று உணர்வும் தேங்கியுள்ள இதயங்கள் இந்தக் காட்சிகளை எளிதில் ஜீரணிப்பது என்பது இயலாத ஒன்று.

இவைகளை இரசித்துப் படித்த சில அப்பாவி உள்ளங்கள் இந்த நூல் வரலாற்று நூல் அல்ல, புதினந்தானே என் வாயடைக்க முயலுகின்றனர். இது புதினம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் இதில் புகுத்தப்பட்டவர்கள் சிவகங்கை சீமையின் வரலாற்று நாயகர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்தப் பேரண்மைமிக்க பெருமக்களது வரலாற்றை படித்து அறிந்தவர்கள், இந்த நூலைப் படித்து இந்தக் காட்சிகளைக் காணும்பொழுது அவர்களது கற்பனைகளில் அற்புத மனிதர்களாக, சமுதாய விடிவெள்ளிகளாக வாழ்ந்து வருகிறவர்களை இவ்வளவு இழிந்த உள்ளத்தினரா என்று எண்ணி நெகிழ மாட்டார்களா? சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரது ராணி வேலு நாச்சியாருக்கும், பெரிய மருது சேர்வைக்காரருக்கும் இப்படியொரு கள்ளத் தொடர்பு இருந்ததை எந்த வரலாற்று ஆவணத்திலும் குறிக்கப்பட்டு இருக்கிறதா? என்று வரலாற்று ஆவணங்களைத் தேடி அலுத்துப் போய் ஆறுதலடைபவர்கள் எத்தனை பேர்? இறுதியில் இவை அனைத்தும் இந்தப் புதின ஆசிரியரது நொந்து அழுகிய ஆபாச கற்பனைகளே என ஓர்ந்து உள்ளம் அமைதி கொள்பவர் எத்தனை பேர்?

இன்னொரு கோணத்திலும் இந்தப் புதினக் காட்சிகளைப் பார்ப்போம். இந்தக் கதாபாத்திரங்கள் வரலாற்று நாயகர்கள் என்பதை மறந்துவிட்டு சாதாரண புதினப் பாத்திரங்களாக எடுத்துக் கொள்வோம். அப்பொழுதும்கூட இந்த இரு கதாபாத்திரங்களும் சமுதாயத்தினின்றும் பெரிதும் வித்தியாசமானவர்களாக தமிழக பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்களாக காட்சியளிக்கின்றனர்.

வேலுநாச்சியாரிடம் காதல் வசப்பட்ட பின்னர் பெரிய மருது சேர்வைக்காரர் கவுண்டன் கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த இள மங்கையையும் அடுத்து முக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ராக்காத்தாள் என்ற பெண்ணையும் மணம் செய்து கொள்கிறார். அப்படி இருந்தும் இந்தப் பெரிய மனிதரது ஆசைக்கு அளவில்லாமல் போய்விட்டது. வேரில் பழுத்த பலாவாக விளங்கிய வேலுநாச்சியார் மீதான 'காதல்" மீக்கூர அவளது தோள்களைப் பற்றி தனது இன்ப நினைப்பை எடுத்துச் சொல்கிறார். அதற்கு வேலுநாச்சியாரும் மறுப்புச் சொல்லாமல் தவணை சொல்கிறாள். அரச குலத்தைச் சேர்ந்த, பிற பெண்களுக்கு வழிகாட்டியான வேலுநாச்சியாரின் பதில் விபரீதமாக இருக்கிறது? 'பெண்ணின் பெருந்தக்கயாவுள' என வினவிய வள்ளுவர் வரைந்துள்ள இல்லக் கழத்தியா இந்தப் பெண் என எண்ணத் தோன்றுகிறது.