பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 227


- அறப்பணிகள், அறக்கொடைகள், திருப்பணிகளை, கல்லிலும் செம்பிலும் வெட்டி வைப்பது மரபு. சிவகங்கை மன்னர்களும் அவ்விதமே கல்வெட்டுக்களில் செப்பேடுகளில் பதிவு செய்து உள்ளனர். இத்தகைய சிவகங்கை ஆவணங்கள் கி.பி.1733 முதல் அதாவது மன்னர் அரசு நிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் காலம் முதல், மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவர், ஏன் கி.பி.1780 முதல் 1789 வரை ராணியாக இருந்த அரசி வேலு நாச்சியார், அவரை அடுத்து கி.பி.1790 முதல் கி.பி.1801 வரை சிவகங்கை மன்னராக இருந்த முத்து விசைய பெரிய உடையாத் தேவர் (சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர்) ஆகியோர் தங்களது பெயரில் 'குளந்தை நகராதிபன்' 'தொண்டியந்துறைக் காவலன்' 'அரசு நிலையிட்ட" என்ற விருதுப் பெயர்களுடன் பல அறக்கொடைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இந்த நூலின் வேறு பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். மருது பாண்டியர்கள் மன்னர்களாக இருந்ததாகக் கொள்ளப்படும் கி.பி.1780-1801 வரையான கால கட்டத்தில் கூட ராணி வேலு நாச்சியாரும், மன்னர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரும் வழங்கிய அறக்கொடைகள் உள்ளன. (அவைகளில் சில செப்பேடுகளின் நகல்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறக் கொடைகள் ஆட்சியில் இல்லாத மன்னர்களால் (நூலாசிரியரது கருத்துப்படி) எப்படி வழங்கி இருக்க முடியும்? இந்த அடிப்படைச் சான்றுகளையும் ஒதுக்கி வைத்து விடுவோம். கி.பி.1780 ஜூலை முதல் தொடர்ந்து சிவகங்கை மன்னர்களாக இருந்த மருதிருவர் அறக்கொடைகளுக்கான ஆவணங்களை வழங்கியிருக்கின்றார்களா என்பதை பரிசீலிப்போம். இதோ மூன்று செப்புப் பட்டயங்கள் உள்ளனவே! மன்னர்கள் மருது பாண்டியர் அளித்தவை. 'தேசிய ஆவணங்களான - தொல்லியல் சான்றுகள் என்று மருது பாண்டிய மன்னர் நூலின் பக்கம் 678-688-லில் நூலாசிரியர் கொடுத்து இருக்கின்றார் அல்லவா? சரி அவைகளையும் பரிசீலிப்போம்.

ஒலைச்சாசனங்கள்

1. தஞ்சாக்கூர் ஒலைச்சாசனம் கி.பி.1784-ல் வரையப்பட்டது. 'அரசு நிலையிட்ட விசய ரெகுநாத பெரிய உடையாத் தேவரவர்களுக்குப் புண்ணியமாக 'ராயமானிய பெரிய மருது சேர்வைக்காரர் அவர்களும்' (வரிகள் 3-4) என்று மட்டும்தான் வரையப்பட்டுள்ளது.

2. குன்றக்குடி ஒலைச்சாசனம் மூன்றும் கி.பி.1790-ம் வரையப்பெற்றன. அவைகளில் 'சிவகங்கைச் சீமை ஆதீன கர்த்தா பெரிய மருது சேர்வைக்காரர்' என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.