பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 229


சேர்வைக்காரரால் செப்பேடு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த செப்பேட்டில் கண்ட சிறப்பினைப் பெறுபவர் வெள்ளை மருது சேர்வைக்காரரின் மைத்துனர் மகனாக இருக்கும்பொழுது இதனை ஏன் வெள்ளை மருது சேர்வைக்காரரே வழங்கவில்லை என்ற வினாவும் எழுகிறது. மேலும் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையில் பிரதானிகளாகத்தான் பணிபுரிந்து வந்தனரே ஒழிய ஆட்சியாளர்களாக (அரசராக) அல்ல, பிரதானி பதவி என்பது அன்றைய நாளில் அமைச்சர், தளவாய் என்ற இருபெரும் பொறுப்புக்களை இருபெரும் பொறுப்புக்களை கொண்டதாகும். மருதுபாண்டியர்கள் கி.பி.1789 வரை சிவகங்கை அரசி வேலுநாச்சியாரது பணியிலும், பின்னர் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையார் தேவரது பணியிலும் தளவாயாக இருக்கும்பொழுது அவருக்கு மற்றுமொரு தளவாய் நைனப்பன்சேர்வை எப்படி அமர்த்தப்பட்டார் என்பதும் புரியவில்லை. அரசு ஆணைப்பதிவுகளில் தளவாய் நைனப்பன் சேர்வை பெயர் காணப்படவில்லை. அதாவது காளையார் கோவில் போரின்பொழுதும் அல்லது போருக்குப் பின்னர் பிடிக்கப்பட்டவர்கள், தூக்கிலிடப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் என்ற இனங்கள் எதிலும் அவர் பெயர் காணப்படவில்லை.

இந்த செப்பேடு இன்னும் சில ஐயப்பாடுகளையும் எழுப்புகின்றது. வரி 11/12-ல் 'சிறுவயல் ஜமீன்தார் வெள்ளைமருது சேர்வைக்காரர்' என குறிப்பிடுகிறது. சிறுவயலில் சின்ன மருதுவும், அவரது குடும்பத்தினரும் குடியிருந்தவரே ஒழிய ஜமீன்தாராக அன்று அவர்கள் வாழவில்லை. ஜமீன்தார் என்ற சொல் சிவகங்கை சீமை வரலாற்றுக்கு புதியது. சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையார் தேவருக்கு எதிராக படைமாத்துர் ஒய்யாத்தேவரை பரங்கிகள் சோழபுரத்தில் வைத்து சிவகங்கை ஜமீன்தார் என முதல்முறையாக சிவகங்கை சீமை முழுவதற்குமே நியமனம் செய்து அறிவிப்பு செய்தனர்.[1]ஆதலால் அந்த நிகழ்ச்சி முன்னரும் பின்னரும் கும்பெனியாரால் அங்கீகரிக்கப்பட்டு சிறுவயல் ஜமீன் இருந்தது கிடையாது.

வரி 18-ல் 'மதுரை ஜில்லா என்ற சொல் காணப்படுகிறது. சீமை என்ற சொல்தான் அப்போது வழக்கில் இருந்தது. அத்துடன் விருபாட்சி, திண்டுக்கல் கலெக்டரது அதிகாரத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் சீமையில்தான் இருந்தது. மதுரை ஜில்லாவில் அல்ல. 'தோப்பாபணம் 1500 கட்டி குடுத்து அபிமானிச்சு' என வரி 27-ல் குறிக்கப்பட்டுள்ளது. தோப்பாபனம் என்பது நாணய வகை அல்ல. வடுகபாளையக்காரர்கள் அவர்கள் செலுத்தி வந்த கப்பத் தொகையை பெரும்பாலும்


  1. Revenue Consultations. Vol.30, P: 247