பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 5


(3) தொண்டைமான் கிளை (4) சித்திரமா கிளை, (5) தனிச்சா கிளை, (6) கார்புத்திர கிளை, (7) காத்திர கிளை என்பன. இந்தக் குடிமக்களது முதல் குடிமகன்தான் மறவர் சீமையின் மகிபதி - சேதுபதி மன்னர்கள். இவர்கள் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[1] சோழநாடு அல்லது செம்பி நாட்டில் இருந்து வந்தவர்களாதலின் இவர்களுக்கு செம்பிநாடன் என்ற விருதும் உண்டு. இவர்களது குடிமக்களில் பெரும்பான்மையினர் கொண்டையன் கோட்டை மறவர் என்பதும், அவர்களில் உட்பிரிவு காரண மறவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மறம் என்ற மாண்பான தமிழ்ச் சொல்லின் இலக்கண, இலக்கிய வடிவாக வாழ்ந்தவர்கள் மறவர்கள். வஞ்சம் இல்லாத நெஞ்சும், விஞ்சுகின்ற மான உணர்வும், தஞ்சமாகக் கொண்டவர்கள் இவர்கள். மன்னன் உயிர்த்தே மலர்த் தலை உலகம் என்ற மரபிற்கு ஏற்ப, தமிழ் மன்னர்களது நால்வகைப் படையாய் அமைந்து அட்டமங்கலங்களுக்கும் உரியவர்களாக வாழ்ந்தவர்கள். வாளும் தோளும் துணை எனக் கொண்டும், நாளும் நாடு காத்து, வீடு பேறு அடைவதே அவர்களது வாழ்க்கையாக இருந்தது. அவர்கள் கொட்டிய குருதி ஆற்றில் தமிழ் மன்னர்களது கொடி, தமிழகத்திற்கு வெகு தொலைவில் உள்ள முன்னீர்ப் பழனத்தின் பன்னிராயிரம் தீவுகளில் எல்லாம் பட்டொளி வீசிப் பறந்தது. தமிழரது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் உலகம் அறியப் பறை சாற்றியது. சோழர், பாண்டியரது பேரரசுகள் எழுந்து பரந்து நின்று, பல நூற்றாண்டு, வரலாற்றைப் பற்றி நுகர்வதற்கு இந்த வீர மறவர்கள்தான் காரணம் என்பது சொல்லாமலே விளங்கும்.

பாண்டிய, சோழ ஆட்சியின் நாட்டுப் பிரிவுகளான நாடுகள், வள நாடுகள் கூற்றங்கள், மறவர் சீமை என்ற இந்தப் பொதுப் பெயரின் அடக்கமாக அமைந்திருந்தன. அவை ஒல்லையூர் நாடு, கோனாடு (இன்றைய திருமெய்ய வட்டம்) கானாடு, சுரபி நாடு, அதளையூர் நாடு, சூரக்குடி நாடு, (காரைக்குடி வட்டம்) திருமலை நாடு, புறமலை நாடு, கல்வாசல் நாடு, இரணிய முட்ட நாடு (திருப்பத்தார் வட்டம்), இடைவள நாடு, தென்னாலை நாடு, தேர் போகி நாடு, (தேவ கோட்டை வட்டம்) கானப்பேர் நாடு, மங்கல நாடு, கல்லக நாடு (சிவகங்கை வட்டம்) புனல் பரளை நாடு, பொலியூர் நாடு (மானாமதுரை வட்டம்) உருவாட்டி நாடு (இளையாங்குடி வட்டம்) இராஜசிங்க மங்கல நாடு, அஞ்சு கோட்டை நாடு, தாழையூர் நாடு, கள வழி நாடு (திருவாடானை வட்டம்) செவ்விருக்கை நாடு, கீழ் செம்பி நாடு, கோடி நாடு (இராமநாதபுரம் வட்டம்) வடதலை செம்பி நாடு, கிடாத் திருக்கை நாடு, ஆப்பனூர் நாடு


  1. கமால் Dr. எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) செப்பேடு 43. பக்: 389