பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 233


கல்வெட்டுக்கள்

1. தொண்டி கல்வெட்டு: கி.பி.1795-ல் பதிவு செய்யப்பட்டது. இதன் வரி- 5; 6-ல் “ராசமானியரான மருது பாண்டியன் உபயம்” என்ற தொடர் மட்டும் தான் காணப்படுகிறது.

2. சிங்கம்புனரி கல்வெட்டு: கி.பி.1801-ல் பதிவு செய்யப்பட்ட இந்தக் கல்வெட்டின் வரிகள் 5, 9-ல்

“ராச ஸ்ரீ அரசு நிலையிட்ட இசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர்கள் காரியத்துக்கு கர்த்தரான ராச ஸ்ரீ மருது பாண்டியர்கள்” என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மேலே கண்ட நூலாசிரியர் தமக்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ள இந்த "தேசிய ஆவணங்கள்” மருதிருவரை ஓரிடத்தில் கூட மன்னர் என்று குறிப்பிடாதிருக்கும் பொழுது, ஏன் மருதிருவர்களே தங்களைச் சிவகங்கை மன்னர்களாக பிரசித்தம் செய்து கொள்ளாத பொழுது, இந்த நூலாசிரியர் மட்டும் அவர்களை மன்னர்களாகப் பெருமைப்படுத்தி எழுதியுள்ளார். அது அவருக்கு இந்தியக் குடியுரிமை சாசனம் அளித்துள்ள ஆதார உரிமைகளின்படி ஏற்பட்டது. என்றாலும், அவர் தமது இந்தக் கருத்தை இந்த நூலின் வழி மக்களிடத்து திணிக்க முயற்சித்து இருப்பது வரலாற்றிற்கு முரணான சரித்திரப் புரட்டாகத் தான் வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுவர் என்பது உறுதி.

பக்கம் 260-261

"கீழிறக்கிக் காட்ட கிடைக்குமா ஆதாரம்?” என்ற தலைப்பில் "இருபத்து ஒரு ஆண்டுகள் மருது பாண்டியர்கள் மன்னர்களாக விளங்கியதை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஆங்கிலேயர் அவர்களை அந்தஸ்த்தில் குறைந்தவர்களாகத் தங்களது ஆவணங்களில் கீழிறக்கி காட்டி வரைந்துள்ளனர்” அடைப்பக்காரர் என்பதற்காவது ஆதாரம் காட்ட முடிந்து இருக்கிறதா? என்று நூலாசிரியர் கேட்கிறார்.

தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆங்கிலேயரின் ஆவணங்களைக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் படித்துப் பார்த்து பரிசீலித்து வரும் வரலாற்று ஆய்வாளன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.

அன்றைய சூழ்நிலையில் இந்த நாட்டு அரசியலைத் தங்களது சொந்த நலன்களுக்கு உகந்த முறையில், கைப்பற்றுவதற்கு ஏற்ற சூழ்ச்சி, ராஜ தந்திரம், வன்முறை ஆகிய வகையில் ஈடுபட்ட பரங்கியர் என்ற கும்பெனியார் வெற்றியும் கண்டனர். ஆதிக்கவாதிகளான அவர்களது நோக்கில் சூழ்நிலைகளைப் புரிந்து பதிவு செய்துள்ளவை அவர்களது