பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


உள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. அத்துடன் அந்த ஒலைச்சாசனத்தில் கையெழுத்து போட்டுள்ள மற்றொருவர் அணியாபதி அய்யன அம்பலம் என்பவர். அனியாபதி, அனுமந்தக்குடிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ள ஊர் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டயத்தின் வரியில் பிரதானி முத்திருளப் பிள்ளை என்று பணியின் பெயர் குறிப்பிட்டு இருப்பது போல தளபதி வணங்காமுடி பள்ளியப்ப சேருவைக்காரன் என்ற குறிப்பும் இல்லை. இராமநாதபுரம் சம்ஸ்த்தான வரலாறான மானுவலில், சேதுபதி மன்னர்களது. பிரதானி, தளபதிகள் யார் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கம் 274) மன்னர் முத்து இராமலிங்க சேதுபதி ஆட்சியில் பணியாற்றிய பிரதானிகள் எழுவர் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தளபதி பளனியப்ப சேருவைக்காரன் என்ற பெயர் அந்தப் பட்டியலில் காணப்படவில்லை!

ஆதலால் வணங்காமுடி பளனியப்ப சேர்வை, என இந்த ஓலைச்சாசன சாட்சி, நூலாசிரியரது கற்பனையான மருது சகோதரர்கள் தந்தை என்பது தெளிவு.

பக்கம்: 53 - 54

'சசிவர்ணத் தேவர் கி.பி.1749-ல் உயிருடன் இல்லை. பூதக்காள் நாச்சியார் கி.பி.1742-லோ அதற்கு பின்னரோ அரசியாராக இருந்து இருக்கலாம்...'

இந்த தொடரின்படி மன்னர், கி.பி.1749 வரை இருந்திருக்கும் பொழுது மூத்தராணியும் அவர் மக்களும் இருக்கும் பொழுது இளையராணி கி.பி.1742-ல் எப்படி ஆட்சிக்கு வந்திருக்கமுடியும்? இதனைப்பற்றி ஆசிரியர் சிந்தித்ததாகத் தெரியவில்லை. நீதிமன்ற ஆதாரங்களைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டால் நீதி மன்றத்தின் தீர்ப்புரையைத்தான் ஆதாரமாகக் கொள்ளலாமே.தவிர, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மறுப்புரை ஆகியவைகளை ஆதாரங்களாகக் கொள்வது மரபு இல்லை. ஆசிரியர் புதுமையாக பல இடங்களில் இவைகளையே நீதிமன்ற ஆவணங்களாகச் சுட்டி உள்ளார்.

நாலுகோட்டை, படைமாத்தூர், சிவகங்கை குடும்ப கொடி வழியொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) இதன்படி பூதக்காள் நாச்சியார் கி.பி.1746-ல் இறந்துவிட்டார் என்பதும் அவருக்கு முத்து வடுகநாதர் கி.பி.1736-ல் பிறந்தார் என்றும் தெரிகிறது.

மற்றும் மன்னர் சசிவர்ணத் தேவர் வழங்கிய செப்பேடுகள் கி.பி.1748 வரை கிடைத்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கணவர் கி.பி.1748 வரை மன்னராக இருந்தபொழுது கி.பி.1742 முதல் இரண்டாவது மனைவி எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும்?