பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


“அம்மானை ஆசிரியர் மருது பாண்டியர்ஆட்சிக் காலத்தில் இளைஞராய் இருந்து விடுதலைப் போரினைப் பார்த்த பேறு பெற்றவர்” (மருது பாண்டிய மன்னர் பக்கம் எண்.13) என்று நற்சான்று வழங்கியுள்ளார். இந்த ஆசிரியர் எந்தப் போரைப் பார்த்தாரோ தெரியவில்லை!

ஏனெனில் காளையார் கோவில் முதல்போரினை 25.6.1772-ல் நடைபெற்றதை காதால் கேட்டு அறிந்தவராகக் கூட தெரியவில்லை. ஆதலால் வரலாற்றுப் புகழ் பெற்ற அந்தப் போரைப் பாடாதது மட்டுமல்ல, சிவகங்கை மன்னர் தற்செயலாக குண்டுபட்டு இறந்தார் என்று மன்னரது தியாகத்தை மறைத்து, சிறுமைப்படுத்தும் தொண்டினை அல்லவா செய்துள்ளார்.

சிவகங்கை கும்மி ஆசிரியரோ,

“காளையார் கோவில் சென்றேகிக்
கல்மதிலேறியே ஏணி வைத்து
துப்பாக்கி வார் பண்ணிச் சுட்டிடவே
தூங்கிய துரையும் ராணியும்தான்
இப்ப வெடிச் சத்தம் ஏதனவே
இருபெருங் கை கோர்த்து வெளியில் வந்தார்
கண்டந்த சிப்பாயி சுட்டிடவே
காந்தனும் ராணியும் பட்டிடவே...”

(சிவகங்கை கும்மி பக்கம் 19)

என்று உறங்கி வெளிவந்த மன்னர் முத்து வடுகநாதர் குண்டுபட்டு உயிர் துறந்தார் என்று பாடியுள்ளார்.அம்மானையாரை அடியொற்றி.

அப்பொழுது மருது இருவரும் முறையே மங்கலத்திலும், சிவகங்கையிலும் இருந்தனர் என்பதையும் மன்னர் இறந்தபிறகு தான் காளையார் கோவில் வந்தனர் என்றும் அவர்கள் வரைந்துள்ளனர். இதற்குப் பிறகு 'மருது வீரர்கள் போரில் இறங்கினர். சிவகங்கைக்கு ஏற்பட்டு வரும் பெரும் சேதத்தை எண்ணி போரை அன்று மாலையே முடிவுக்கு கொண்டு வந்தனர் (ம.பா.ம.பக்கம் 92-93) எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு ஆதார அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள மேஜர் விபார்ட்டின்' எழுத்தில்,

மன்னர் கொல்லப்பட்ட பிறகு மருது வீரர் போரை அன்று மாலை வரை நீடித்தனர் என்ற செய்தியே இல்லை!

அம்மானை, கும்மி ஆசிரியர்களும் மன்னர் இறந்தபிறகு, மருது வீரர்கள் காளையார்கோவில் வந்து அன்று மாலை வரை சண்டையிட்டதாகச் சொல்லவில்லையே!