பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


பொருதின. வெற்றி தஞ்சை படைகளுக்கு. பவானி சங்கர சேதுபதி கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[1]

இராமநாதபுரம் கோட்டை மீட்கப்பட்டது. சேது நாட்டில் பதட்டமும், பயமும் நீங்கி மீண்டும் அமைதி நிலவியது. ஆனால் சேதுபதி பட்டத்தை யார் சூட்டிக் கொள்வது? விஜய ரகுநாத சேதுபதியின் மகளை மணந்தவர் சசிவர்ணத் தேவர். பவானி சங்கரத் தேவரால் கொல்லப்பட்ட சுந்தரேச சேதுபதியின் இளவல் கட்டத்தேவர். இந்த இருவரது கூட்டு முயற்சியினால் சேது நாட்டில் அமைதி திரும்பியது. இருவருமே சேது பட்டத்திற்கு உரியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படியானால் சேதுபதியாவது யார்? இந்த வினாவிற்கு விடை காண முயன்றனர். இருவரும் ஆட்சியாளர்களாக மாறுவதைத் தவிர வேறு வழியே இல்லை. வரலாற்றின் போக்கை தடுத்து நிறுத்தும் வலிமை யாருக்கு உண்டு!

இத்தகைய இக்கட்டான நிலை சேது நாட்டில் முன்பு ஒரு முறை ஏற்பட்டது. கூத்தன் சேதுபதி இறந்தபொழுது அவரது இரண்டாவது மனைவியின் மகன் தம்பித் தேவருக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு இரண்டாவது சடைக்கத் தேவர் தளவாய் சேதுபதி என்ற பெயரில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். தம்பித் தேவரது கிளர்ச்சி பயனளிக்காததால் அப்பொழுது மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரிடம் தம்பித் தேவர் முறையீடு செய்தார். திருமலை நாயக்கர் மிகவும் முயன்றும் சமரசம் செய்ய இயலாததால், கடைசியில் சேதுநாட்டு பிரிவினைத் திட்டத்தை அளித்தார்.

காளையார் கோவில் பகுதி தம்பி தேவருக்கும், திருவாடானை பகுதி தனுக்காத்த தேவருக்கும், இராமநாதபுரம் பகுதி திருமலை தேவருக்கும் என பிரித்து கொடுக்கப்பட்டது.[2] இது நிகழ்ந்தது கி.பி. 1745-ல். ஆனால் தம்பித்தேவர் சில மாதங்களில் காளையார் கோவிலில் காலமானார். அதனை அடுத்து, சில மாதங்களில் தனுக்காத்த தேவரும் திருவாடானையில் மரணமுற்றார். சேதுநாடு மீண்டும் திருமலை சேதுபதியின் தலைமையில் ஒன்றுபட்டது. பல சாதனைகள் எய்துவதற்கு காரணமாக அமைந்தது. இப்பொழுதும் அது போலவே சேது நாடு இரண்டாவது முறையாக இரண்டு பிரிவுகளாக, இரண்டு அரசுகளாக பிரிவு பெற்று இயக்கம் பெற்றன. பிரிவினை என்றாலே பலவீனம்தான். ஆனால், அப்பொழுது பிரிவினையைத் தவிர வேறு வழி இல்லை.


  1. Raja Ram Rao - Manual of Rammad Samasthanam (1891), P: 240
  2. Ibid. P: 239