பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 15

இந்தக் கதையின் உண்மையான பின்னணி என்ன என்பதை சம்பந்தப்பட்ட மன்னர் சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் அவர்களது சக ஆண்டு ஆயிரத்து அறுநூற்று ஐம்பதில் பிரமாதீச வருடம் சித்திரை இருபத்து ஒன்றாம் தேதி (கி.பி. 1733) வழங்கிய செப்பேட்டு வாசகம் தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டில்,

... சாத்தப்ப ஞானிகள் வெள்ளை நாவலடி ஊத்தில் தவசு இருக்கையில், நாம் கண்டு தெரிசித்ததில் உங்களுக்கு நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து, நீ யானை கட்டி சீமையாளுவாய் என்று விபூதி கொடுத்து, தஞ்சாவூர் போகும்படிக்குத்திரவு கொடுத்தபடிக்கு. நான் போய் புலி குத்தி.... அவர்கள் ஒத்தாசையால் இராமநாதபுரம் பவானி சங்கு தேவனை ஜெயம் செய்து, வீரத்தின் பேரில் கோவானூரில் இருந்த சாத்தப்ப ஞானியவர்களைக் கூட்டி வந்து பூசை பண்ணின ஊத்தில் திருக்குளம் வெட்டி, சிவகெங்கை என்ற பேரும் வரும்படியாகச் செய்த திருக்குளத்துக்கும் வடக்கு காஞ்சிரங்கால், தென் வடலோடிய புத்தடிப் பாதைக்கு கிளக்கு, பண்ணிமுடக்கு பள்ளத்துக்கு தெற்கு பாலமேடு தென்வடலோடிய பாதைக்கு மேற்கு, இந் நான்கெல்லைக்குள்பட்ட காட்டுக்குள் இந்த சாத்தப்ப ஞானியாருக்கு தவிசுக்கு மடம் கட்டிக் குடுத்து இந்த மடத்தில் குருபூசை செய்தும், நவராத்திரி, சிவராத்திரி, பூசைக்கு நாலு கோட்டை சோளபுரம் ஆறாம் குளம் கண்மாய்க்களுக்கு கிழக்கு. அந்தக் கண்மாய் பெரிய மடை கிழமேலோடிய வாய்க்காலுக்குத் தெற்கு கருங்காலக்குடி தர்மத்துக்கல்லான சரகணை தென்வடலோடிய பாதைக்கு மேற்கு மருதவயல் கண்மாய் நீர்ப்பிடிக்கு வடக்கு இந்த பெருநாங்கெல்லைக்குள்பட்ட மருத வயல்... சகலமும் தான சாதனமாக..."

என்று[1] சாத்தப்ப ஞானியாரது ஆசி பெற்றதும், பின்னர் அவருக்காக திருக்குளம் வெட்டி திருமடம் கட்டியதான சாதனம் செய்து கொடுத்ததும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அது முதலில் சிவனது கங்கை போல புனிதமான நீர்த் துறையாக கருதப்பட்டு சிவகங்கைக் குளமென வழங்கப்பட்டது. அந்தக் குளத்தின் மேற்கு மூலையில் புதிய அரசின் தலைமை இடமான கோட்டை அமைக்கப்பட்டதும், பின்னர் சிவகங்கைக் கோட்டை எனவும் பெயர் பெற்றது. அதனைச் சுற்றி நாளடைவில் எழுந்த மக்கள் குடியிருப்பு சிவகங்கை நகராயிற்று.

மதுரை மாநகரை தொண்டித் துறைமுகத்துடன் இணைக்கும் பெரு வழியும், திருநெல்வேலிச் சீமையிலிருந்து, ஸ்ரீவில்லிபுத்துார்,


  1. சிவகங்கைச் செப்பேடு.