பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

அனுபவத்தைப் பயன்படுத்தியும், சேதுபதி மன்னரது சேது நாட்டு ஆட்சி முறைகளை நடைமுறைப்படுத்தியும் வந்தார். அன்றைய நிலையில், சிவகங்கைச் சீமை மக்களது ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாதனைகளைச் செயல்படுத்துவதாக இருந்தது. இந்த மன்னர், மக்களது வழிபாட்டுத் தலங்கள், திருமடங்கள், அன்னகத்திரங்கள் ஆகியவை சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காக, தக்க தொகையினை வருவாயாக, பெறத்தக்க ஊர்களையும், ஏந்தல்களையும் இறையிலியாக - சர்வ மான்யங்களாக அந்த அமைப்புக்களுக்கு வழங்கினார்.[1]

கி.பி.1729 முதல் கி.பி. 1749 வரையிலான கால கட்டத்தில், ஏராளமான அறக்கொடைகள் இந்த மன்னரால் வழங்கப்பட்டதற்கான குறிப்புகள் மட்டும் சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகளில் காணப்படுகின்றன. கல்லிலும், செம்பிலும், ஒலைப் பட்டயங்களிலும் கைச்சாத்திட்டு வழங்கப்பட்ட இந்த ஆவணங்களில் பல, சரியான பராமரிப்பும், கவனமும் இல்லாமல், கால நீட்சியில் அழிந்து கெட்டுப்போயின. மிகவும் அரும்பெரும் முயற்சியில் சேகரிக்கப்பட்ட இந்த சர்வமான்ய, தான சாதன பட்டயங்கள் சில இந்த நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.

கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, இந்த மன்னர், இளையான்குடி இராஜேந்திர சோழீஸ்வர ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயம், அலட்சிய ஐயனார் ஆலயம், அழகச்சி அம்மன் ஆலயம் ஆகிய திருக்கோயில்களின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. எமனேஸ்வரம் சத்தியவாசக சுவாமி மடம், திருவாவடுதுறை மடம், மானாமதுரை பிருந்தாவன மடம், தமிழ்ப்புலவர்கள், வடமொழி வியாகரண பண்டிதர்கள் மற்றும் பல தனியார்களும் இந்த மன்னரது தண்ணளியில் அறக்கொடைகள் பெற்று வாழ்ந்து வந்தனர் என்பது வெள்ளிடை.

இதோ அந்த அறக்கொடைகளின் பட்டியல். (கிடைத்துள்ள குறிப்புகளின்படி)

அறக்கொடை பெற்றவர்கள்

1. திருக்கோயில்கள்

கி.பி.1732

சித்து ஊரணி(எமனேஸ்வரம் வட்டம்)

இராஜேந்திர சோளிஸ்வரர் ஆலயம் இளையான்குடி.


  1. சிவகங்கைச் சீமை செப்பேடுகள்