பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 39

வாலாஜா முகமது அலி கேட்டுக் கொண்டார். இந்த சூழ்நிலைகளில் மறவர் சீமையின் உதவியும் ஒத்துழைப்பும் யாருக்கு அளிக்கப்பட வேண்டும்?

தமிழக அரசியலை அலைத்துக் கொண்டிருந்த இந்த பூதாகரமான பிரச்னையில் மறவர் சீமை முழுமையாக ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம். அவ்விதம் செய்யாமல் தனித்து நிற்பது அறிவுடைமையாகாது. அப்படியானால் எந்த அணியில் சேருவது? மறவர் சீமையின் பரம்பரை பகைவர்களான புதுக்கோட்டைத் தொண்டமானும் தஞ்சாவூர் மன்னரும் முந்திக் கொண்டு நிற்கும் முகமது அலியின் அணியிலா?

மன்னர் முத்து வடுகநாதர் பிரதானியுடன் ஆலோசனை செய்தார். அடுத்து சேதுபதி மன்னருடன் கலந்து முடிவிற்கு வந்தார். வழக்கம் போல், இரண்டு மறவர் சீமைகளும், ஆற்காட்டு நவாப் பதவிக்கு நியாயமான உரிமையுள்ள சந்தா சாகிபை ஆதரிப்பது என்பது தான் அந்த முடிவு. இந்த முடிவுக்கு நியாயமான காரணம் மட்டுமல்லாமல் சந்தா சாகிபின் முந்தைய நடவடிக்கையைக் கொண்டும் அவருக்கு சாதகமாக இந்த முடிவு செய்யப்பட்டது.

முன்னர், திருச்சி நாயக்கப் பேரரசின் ராணியான மீனாட்சிக்கு உதவுவதற்கு முன்வந்த சந்தா சாகிபு, திருச்சி சீமையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருந்த மைசூர் படைகளை விரட்டி அடித்ததுடன் மதுரை சீமைப் பாளையங்களையும் தாக்கி பாளையக்காரர்களிடம் கப்பம் பெற்றார். ஆனால் மதுரையை அடுத்துள்ள மறவர் சீமைகளை ஒன்றும் செய்யவில்லை.[1] குறிப்பாக சந்தா சாகிபுக்குப் பயந்து சிவகங்கையில் பங்காரு திருமலையும் அவரது மகன் விஜயகுமாரனும் அரசியல் தஞ்சம் பெற்று இருப்பதை அறிந்து இருந்தும், சிவகங்கையை அவர் சாடவில்லை. இத்தகைய நடுநிலையான நோக்குடைய சந்தா சாகிபுவிற்கு உதவ மறவர் சீமை மன்னர்கள் முன் வந்தனர். அவர் மேற்கொண்ட திருச்சிராப்பள்ளி முற்றுகைக்கு துணைபுரிய நான்காயிரம் மறவர்கள் பூரீரங்கம் சென்று நிலை கொண்டனர்.[2]

இந்தப் போருக்கு முழுமையும் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி, சந்தா சாகிபுக்கு போதிய படையணிகளையும் தளவாடங்களையும் அளிக்க இயலவில்லை. மற்றும், இந்த முற்றுகையில் ஈடுபடுத்தப்பட்ட பிரெஞ்சுத் தளபதிகள், சந்தா சாகிபிற்கு கட்டுப்படாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டனர். இதனால் போரின் கடுமை பிசுபிசுத்தது. மறவர் சீமை அணிகள் வெறுப்புடன் சீமை


  1. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 72
  2. Rajayyan Dr. K. History of Tamil Nadu (1972)