பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 43


மகாணம் முழுவதும் இப்பொழுது தஞ்சைப் படைகளால் சூழப்பட்டன.[1] அடுத்து, இராமநாதபுரம் கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இராமநாதபுரம் கோட்டையை பிடிப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற முற்றுகையில் தோல்வி கண்டு இராமநாதபுரம் ராணி முத்து திருவாயி நாச்சியாருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட தஞ்சை மன்னர் துல்ஜாஜி சிவகங்கைச் சீமையில் புகுந்தார். அப்பொழுது முத்து வடுக நாதருக்கு ஒலை ஒன்றை அனுப்பி வைத்தார்.[2] அதில் மன்னர் கைப்பற்றியுள்ள ஆறு யானைகளை ஒப்படைப்பதுடன், செலவுத் தொகைக்காக ரூபாய் ஒரு லட்சம் கொடுக்குமாறு அந்த ஒலையில் தஞ்சை மன்னர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே மறவர் சீமை நோக்கி தஞ்சை படைகள் செல்வதையறிந்த நவாப் முகமது அலி, தமது படைகளுடன் தஞ்சை நோக்கி வந்தார்.[3] நவாபின் படைகள் தம்மை தொடர்வதை அறிந்த தஞ்சை மன்னர் சிவகங்கைப் படையெடுப்பைக் கைவிட்டு விட்டு தஞ்சாவூர் திரும்பிவிட்டார்.[4] அத்துடன் நவாப் அவரை விடவில்லை. தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தன்னரசுகளும் தனது மேலாண்மைக்கு உட்பட்டவை; ஆதலால் தஞ்சை மன்னர் அத்து மீறி இராமநாதபுரம், சிவகங்கை மீது படையெடுத்தது தவறான போக்கு என்பதை குறிப்பிட்டிருந்தார். தஞ்சை அரசரோ மறவர் சீமையின்பகுதி தமக்கு கட்டுப்பட்டது என்று உரிமை கொண்டாடினார்.[5] தஞ்சை மீது போர் தொடுக்க ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனியாரை அணுகினார். கர்நாடக நவாப் கம்பெனியாருடன் கி.பி.1765-ல் செய்து கொண்ட உடன்பாட்டில் மறவர் சீமை பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால் படை உதவி அளிக்க கம்பெனியார் தயங்கினர். இது பற்றி முடிவு செய்ய சென்னை கவர்னர் தனியாக ஆய்வுக் குழு ஒன்றை நியமித்தார். அந்த குழுவின் கண்டுபிடிப்பு அறிக்கை மறவர் சீமையும் புதுக்கோட்டை தொண்டைமானும் எப்பொழுதும் எந்த அரசுக்கும் முறையான கப்பம் செலுத்தவில்லை என்பது தான். மேலும் திருச்சியில் நாயக்க அரசு இருந்த பொழுதும், மறவர் சீமையும் புதுக்கோட்டையும் தன்னரசுகளாகவே இருந்தன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.[6] ஆனால் தஞ்சைப் படை எடுப்பினால் ஏற்படும் செலவை ஏற்றுக் கொள்வதுடன் முப்பத்து ஐந்து லட்சம் ரூபாய் அன்பளிப்பு அளிப்பதாக நவாப் சொன்னவுடன் கவர்னர் நவாப்பின் வேண்டுகோளை ஏற்று


  1. Military Country Correspondence Vol. 19/25.3.1771. P. 79
  2. Ibid. DL. 17.3, 1771
  3. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 253
  4. Radhakrishna Iyer. General History of Pudukottai (1916) P: 251
  5. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 253
  6. Ibid, P: 254,