பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தஞ்சை மீது போர் தொடுக்க ஒப்புதல் அளித்தார். இவ்விதம் தஞ்சை அரசை பல வகையான சிக்கலுக்குள் சிக்க வைத்து பெரும் பணத்தை செலவழிக்குமாறு செய்த நவாப், அடுத்து மறவர் சீமையையும் கைப்பற்றுவது பற்றிச் சிந்தித்தார்.

கி.பி.1752-ல் தனது பதவி போட்டியில் சந்தா சாகிபை வென்ற பிறகு, தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளில் பாளையக்காரர்களுடனான போர்களில்

கி.பி.1757-61-ல் திருநெல்வேலி பாளையக்காரர்கள் போர்,

கி.பி.1763-1764-ல் மதுரை கான்சாகிபுவுடன் போர்,

கி.பி. 1765-ல் அரியலூர், உடையார் பாளையங்களின் மீதான போர்,

கி.பி.1764-ல் திருவாங்கூர் மீதான போர்,

கி.பி.1771-ல் தஞ்சை மீதான போர்

என்று தமது மேலாண்மையை நிலைநாட்டிய வாலாஜா முகம்மது அலி, எஞ்சியுள்ள இராமநாதபுரம், சிவகங்கை தன்னரசுகளைக் கைப்பற்றுவது என முடிவு செய்தார்.

இத்தனை ஆண்டுகளாக அவர்கள் நவாபிற்கு கப்பம் செலுத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் அடுத்து நவாப்பின் முன் அனுமதி இல்லாமல் டச்சுக்காரர்கள் தமது சீமையில் தொழிற் மையங்கள் தொடங்குவதற்கு சேதுபதி மன்னர் அனுமதி அளித்ததும் அதைவிட பெரிய குற்றம் அல்லவா? இன்னும் சட்டவிரோதமாக சர்க்கார் கிராமங்களை கைப்பற்றியிருப்பதாகவும் இராமநாதபுரம் மன்னர் மீதான குற்றச்சாட்டு தொடர்ந்தது. இத்தகைய காரணங்களைக் காண்பித்து மறவர் சீமையை மீட்பதற்கு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் படையுதவி கோரினார். ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மறவர் சீமை தன்னரசுகளை பற்றிய தெளிவான அறிக்கையை தயாரித்த கம்பெனியார், அவர்களுக்கே உரிய சந்தர்ப்பவாதம் காரணமாக, இப்பொழுது மறவர் சீமையைக் கைப்பற்ற படை உதவி அளிக்க முன்வந்தனர். ஆம் அவர்களுக்கு வேண்டியது அரசியல் ஆதாயம்! அடுத்தது பணம்.

மே 1772-ல் திருச்சியிலிருந்து பெரும்படை ஒன்று புறப்பட்டது. ஜோஸப் சுமித் என்ற ஆங்கில தளபதியும் நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா ஆகியோரது கூட்டுத் தலைமையில்.[1] முதலில் இராமநாதபுரம் கோட்டை இந்த படை எடுப்பிற்கு பின்பலமாகவும் பிற பாளையக்காரர்கள் உதவிகளை இராமநாதபுரம் சிவகங்கை மறவர்கள் பெறாமல் தடுக்கவும், மதுரைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயரது இன்னொரு அணி தளபதி பான்ஜோர் என்பவர் தலைமையில் திருப்புவனம் வந்தது [2]


  1. Vibart.Maj. - History of Madras Engineers (1881) Vol. I. P: 120-121
  2. Military Consultations Vol. 52/15.6.1771. P: 442