பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ் எம் கமால் ⚫ 47


அந்நிய சக்திகளை ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு களத்தில் மடிந்த முதலாவது மன்னர் முத்து வடுகநாதர்.

காளையார் கோவில் படுகொலை பற்றிய செய்தி லண்டனுக்குப் போய் சேர்ந்ததும் ஆங்கில - கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகள் தளபதி ஜோசப் சுமித்தை கொலையாளி என குற்றம் சுமத்தினர். அமைதிப் பேச்சிற்கு உடன்பட்ட பிறகு போர் தொடுத்து படுகொலை நடத்தியதற்காக அவர்மீது ராணுவ விசாரணையை நடத்தினர்.[1] கம்பெனியாரது போர்வீரர்களிடம் நிலவிய கட்டுபாடின்மை காரணமாக, அவர்களைத் தன்னால் கட்டுப்படுத்தி அந்தப் போரைத் தவிர்க்க இயலவில்லை என்று தளபதி சுமித் தமது இயலாமையை தெரிவித்தார்.[2] அவரது சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதி விசாரணையின் பொழுது, காளையார் கோவில் கோட்டைக்குள் காணப்பட்ட அத்துணை மக்களும், மன்னரது மனைவி, மகள், தவிர அனைத்து மக்களும் காரணமின்றி கொல்லப்பட்டனர் என்ற கோர்க் கொலையைப் பற்றிய அதிர்ச்சி தரும் செய்திகளைாக கேட்ட இளகிய மனம் படைத்த கம்பெனி இயக்குநர் சிலர், நீதி மன்றத்தில் இருந்து வேதனையுடன் அகன்று விட்டனர். லண்டனில் இருந்து வெளியான இரண்டு செய்தித்தாள்கள், "தளபதி அப்ரஹாம் பான்ஜோர் காளையார் கோவில் கொலைகாரன்" என வர்ணித்து எழுதின.[3] தனது உத்திரவுகளைப் போர்வீரர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட விளைவு என்று சமாதானம் கூறி தன் மீது பழியைத் தவிர்க்க முயன்றார் அவர். இவருக்குத் தண்டனை கிடைப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார். இவையனைத்தும் 25.06.1772-ல் காளையார் கோவில் கோட்டையில் பரங்கிகள் நடத்திய காட்டு மிராண்டித்தனமான படுகொலையின் பரிமாணங்களை ஒரளவு நினைத்து பார்ப்பதற்கு ஏதுவாக உள்ளது.

மன்னர் முத்து வடுக நாதரது மரணம், சிவகங்கைச் சீமை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் அவதியுற்று மக்கள் மீட்சி பெறுவதற்குள் அந்நியரது ஆக்கிரமிப்பு படை தனது கைவரிசையைக் காண்பிக்கத் தொடங்கியது. காளையார் கோவில் கோட்டைக்குள் இருந்த அனைத்து மக்களையும் பரங்கியர் படுகொலை செய்த இரத்த வெறியுடன் சிவகங்கை சென்றனர். அங்கு அனைத்து வீடுகளையும் கொள்ளையிட்டனர். அவர்கள் கொள்ளை கொண்ட அணிமணிகளின் மதிப்பு அன்றைய நிலையில் ரூபாய் ஒன்றரை லட்சம் என அவர்களது ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.[4]


  1. Love H.D. - Vestiges of Old Madras Vol. (III) P.71
  2. The London Packet Dt. 2.3.1774.
  3. The British Chronicle Dt. 3.5, 1774.
  4. Military Consultations Vol.42 / July 1772. P: 607.