பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


மக்களை பீதியும் கவலையும் பற்றி அலைத்தது. முற்றிலும் எதிர்பாராத இந்தச் சூழ்நிலை, மறைந்த மன்னர் முத்துவடுகநாதரது அமைதியும் மனநிறைவும் தந்த இருபத்து இரண்டு வருட (கி.பி.1750-72) ஆட்சியை நினைத்து நினைத்து வருந்தும் நிலையை ஏற்படுத்தியது. ஆண்டிலும், அனுபவத்திலும் இளையவரானாலும் ஆட்சிமுறையில் தமது தந்தையின் அடிச்சுவட்டினைப் பின்பற்றியவராக நடந்து வந்தவர் அல்லவா அவர்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரிடமும், காளையார் கோவில் காளைநாதரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தேவாரப் பதிகம் பெற்றதும், பாண்டியரது திருப்பணியுமான காளையார் கோவிலின் நுழைவு வாயிலில் மிகப் பிரம்மாண்டமான கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்தார். இந்த மன்னரது இதயத்தின் அடித்தளத்தில், திருமடங்களுக்கு கூடுதலான இடம் அளித்து இருந்தார். காரணம் அன்றைய நிலையில் மக்களது சமுதாய வாழ்க்கை செம்மை பெற மடாதிபதிகளின் தொண்டு மிகவும் தேவை என்பதை உணர்ந்து இருந்தார். இதனால் சிவகங்கை பண்டார மடம், காளையார் கோவில் மிளகாய்த் தம்புரான் மடம், ஊத்துமலை மடம், திருவாவடுதுறை பண்டார மடம், தருமபுரம் மடம், திருப்பனந்தாள் மடம், சிருங்கேரி மடம், சதுரகிரி குளந்தை பண்டார மடம் ஆகிய அமைப்புகளின் பீடாதிபதிகள் இந்த மன்னரிடமிருந்து பல அறக்கொடைகள் பெற்று இருந்ததை கீழ்க்கண்ட பட்டியலில் காணமுடிகிறது.

ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, எந்த சமஸ்தானாதிபதியும் செய்யாத சாதனையாக, கன்னட தேசத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு இந்த மன்னர் திருப்புவனம் வட்டத்தில் கருங்காலகுடி, தவத்தார் ஏந்தல் என்ற இரு ஊர்களை சர்வமான்யமாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்துக்களால் இந்த நாட்டின் மிகச் சிறந்த புண்யத்தலமாக கருதப்பட்டு வரும் காசியின் கங்கைக் கரையில் தமது பாட்டனார் நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது நினைவாக ஒரு மடம் ஒன்று அமையவும் அதில் முறையாக மகேசுவர பூஜை நடைபெறவும் வல்லக்குளம் என்ற கிராமத்தை அந்த தர்மத்திற்கு ஈடாக தருமபுரம் ஆதினகர்த்தருக்கு வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[1] காரணம், அன்றைய கால கட்டத்தில் முடிமன்னரும் முத்தமிழ் வள்ளல்களும் அருகி இருந்த அவல நிலையில், கோடை கால குளிர் நிழலாகத் தமிழையும் சமயத்தையும் வளர்த்தவர்கள் இந்த மடாதிபதிகள். சுவாமி காரிய துரந்தரன் என விருது பெற்ற சேதுபதிகளின் வழியினரான இந்த மன்னர்கள், இவர்களை பொன்னும் பொருளும் ஊரும் பேரும் வழங்கி நாளும் புரந்ததில் வியப்பில்லைதான்.


  1. சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகள்.