பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. ஆற்காட்டு நவாப்பின்
ஆட்சி

காளையார் கோவில் கோட்டைப் போரில் சின்ன மறவர் சீமையின் வீரம் விலை போகாததால் தோல்வியுற்ற மறவர்கள், வழி நடத்தக் கூடிய தலைவர் இல்லாமல் தத்தளித்தனர். தலைக்குனிவுடன் ஆக்கிரமிப்பாளரது ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களது உள்ளம் உலைக்களம் போல தன்மானத்தினால் கொதித்து குமுறிக் கொண்டிருந்தது.

சிவகங்கைக் கோட்டையின் பாதுகாப்பினை ஆற்காட்டு நவாப்பின் படைகளும் கும்பெனியாரது அணிகளும் மேற்கொண்டன. நவாப்பின் நிர்வாகம் சிவகங்கை கோட்டையில் இருந்து இயங்கத் தொடங்கியது. பேட்டைகளிலும், சுங்கச் சாவடிகளிலும் மிரட்டு மொழி பேசுகின்ற முரட்டு பட்டாணியர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் நாள்தோறும் சிவகங்கை அரண்மனைக்கு எதிரே உள்ள பரந்த மைதானத்தில் சீருடை பூண்டு அணி வகுத்து ஆங்கிலத் தளபதிகளது உத்திரவுப்படி பயிற்சிகளை செய்து வந்ததை மக்கள் சற்று வியப்புடன் கவனித்து வரலாயினர்.

இந்த கவாத்து மைதானத்திற்கு அருகில் அரண்மனை முகப்பிற்கு அண்மையிலேயே புதிதாக அமைக்கப்பட்ட மாளிகையில் ஆற்காடு நவாப்பின் மூத்த மகன் உம்தத் உல்-உம்ரா தங்கி இருந்தார். அவர் சிவகங்கைச் சீமையில் நவாப்பின் நேர் பிரதிநிதியாக செயல்பட்டார். புதிய அரசின் நிர்வாகம் அடுத்தடுத்து பல புதிய ஆணைகளைப்