பக்கம்:சீவகன் கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மருமகனுக்கு உதவப் போவதை நினைந்தான். தன் மகன் சீதத்தனுக்குத் தன் அரச உரிமையைத் தந்து தான் தன் நாட்டைக் காக்க வேண்டிய கடமையாகிய பளுவி லிருந்து விலகிக்கொண்டான்; பின்னரே சீவகனோடும் மற்றவரோடும் மேல் நடக்கவேண்டுவன பற்றிக் கலந்து சிந்தித்து ஆராயலானான். தான் சீவகனோடு சூழ்ந்து மேல் நடப்பதைப் பற்றி, மாற்றானுடைய ஒற்றர்கள் அறியா வகையில், திறம்பட நடந்துகொண்டான் கோவிந்தராசன். அதற்கேற்பச் சீவகனும் அவன் தோழரும் மற்றவர்களும் அமைதியுற்றிருந்தார்கள்.

அதே சமயத்தில் கட்டியங்காரன் கோவிந்தராச னுக்கு அனுப்பிய ஓலை ஒன்று வந்தது. கோவிந்தராசன் தான் வஞ்சித்துக் கொன்ற சச்சந்தன் மைத்துனனே என்பதை அறிந்து அவனையும் எப்படியாவது வஞ்சிக்க வேண்டுமெனக் காலம் கருதியிருப்பான் கட்டியங்காரன். அவன் பல முறை முயன்றும் பயனளியாதிருந்திருக்க லாம். தான் குற்றமற்றவன் என்பதை இன்னும் நிலை நாட்ட விரும்பினான் கட்டியங்காரன்; தான் கோவிந்த ராசனோடு தனியாகப் பேசப்போவதாகவும், நேரில் தன் மேல் குறையில்லை என்பதை விளக்குவதாகவும் எழுதி யிருந்தான். தேவர் அவன் ஓலை வடிவில் தீட்டிய எழுத்தைத் திறம்பட வடித்துக் காட்டுகின்றார். சச்சந்தன் இறந்தமைக்குக் கட்டியங்காரன் வேறு காரணம் காட்டத் துணிந்துவிட்டான் ; அடக்க முடியாத அசனி வேகம் என் னும் யானையை முயன்று அடக்கி வெற்றி பெற்று, அதன் மேல் சச்சந்தன் ஏற இருந்த காலத்து அஃது அவனைக் கொன்றுவிட்டது என்ற பொய்க்கதையையும் கடிதத்தில் எழுதியிருந்தான்; மேலும், கோவிந்தராசனிடம் தான் அன்பு கொண்டதாகவும், அவனுக்காக உயிரையும் தருவதாகவும், அவன் வரின் தன்மேலுள்ள பழி நீங்கும் என்றும் தீட்டியிருந்தான்; வந்தால், அந்நாட்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/121&oldid=1484142" இலிருந்து மீள்விக்கப்பட்டது