பக்கம்:சீவகன் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 21 ஆட்சி மாற்றத்தால் அவன் தனக்கும் அரசினுக்கும் பின்னர்ப் பெருந்தீங்கையே தேடிக்கொண்டான் என் பதை எச்சரித்துரைத்தான். அதைக் கேட்ட மன்னன், அவரவர்க்கு முன்னமே அளந்து வைத்தபடியே தான் அனைத்தும் நடக்கும்' என்று விதியின் மேல் பழிசுமத்திய காரணத்தால், அங்கிருந்தவர் வேறு கூற முடியாதவ ராய் அவனை விட்டுச் சென்றனர். அரசனும் அவர்கள் சொற்களையெல்லாம் உ கொள்ளானாய்க் கட்டியங்கார னையே அனைத்துக்கும் உரியவனாக்கினான்; விசயையை விட்டுப் பிரியாதவனானான். கனவு நிகழ்ச்சி: தானும் நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்துகொண்டே யிருந்தன. அமைச்சர் சிலர் கூறியதை ஏற்றுக்கொள்ளா நிலையில் ஒருவரும் அரசனைச் சார்ந்து அறிவுறுத்துவார் இலராயினர். எனினும், விசயையின் கனவு நிகழ்ச்சி ஒன்று அரசன் மனத்தைச் சற்று விழிப்படையச் செய் தது என்னலாம். கனவு,நினைப்பின் தோற்றமென்றும், வருவதை உணர்த்துவதென்றும் கனவு நூலோர் சொல் லுவர். இங்கு அரசி விடியற்காலையில் கண்ட கனவுகள் அவர்களுக்கு வருங்காலத்தை உணர்த்துவனவாய் அமைந்தன. இன்பவாழ்வு ஒன்றைத் தவிரப் பிறவற் றைக் கனவிலும் அறியாத பெண்ணலத்தளாகிய அரசி, அக்கொடுங்கனவுகளைக் கண்டதும் விழித்தெழுந்தாள்; மனம் தளர்ந்தாள்; அரண்மனையின் ஒருசார் அமைந் துள்ள தன் குல தெய்வத்தை வணங்கினாள்; வழிபாட்டு முறைப்படி பூவும் சாந்தும் கொண்டு இறைவனை வணங் கிப் பின் தன் கணவனை அடைந்து, கனவு நிலையைக் கூறுவாளாயினள், இன்ப வாழ்வே என்றும் இருப்பது என்ற நினைவில் பிற எல்லாவற்றையும் மறந்திருந்த சச்சந்தனுக்கும் அக் கனவுகள் உள்ளத்தைத் தொட்டிருக்கக்கூடும். ஆம்! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/22&oldid=1484654" இலிருந்து மீள்விக்கப்பட்டது