பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதுமையார் இலம்பகம்105



இவன் அரசமகன் என்பதைச் சீவகன் அறிந்தான்; அவன் இவனை விடுவதாக இல்லை.

இருவரும் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. ஏன் எனில் அந்தக் காலத்தில் தேநீர் அமுலில் இல்லை; ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

“உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டான்.

“இராசமாபுரம் சென்றிருந்தேன். அங்கே சீவகனுக்கும் தத்தைக்கும் இசைப்போட்டி நடந்தது. அதற்கு யானும் சென்றிருந்தேன். அப்பொழுது சீவகன் பாடிய பாட்டு எனக்குத் தெரியும்; அது என்னை அப்படியே கவர்ந்து விட்டது” என்றான்.

“சீவகனை நீ பார்த்திருக்கிறாயா?”

“அந்த மேடைமீதுதான் பார்த்திருக்கிறேன்; வீரம் மிக்கவன்; அங்கு அவனை வளைத்த அரசர்களை எல்லாம் புறமுதுகிடச் செய்தவன். வீணை வித்தகன்; அந்தத் தத்தை அவனிடம் ததிங்கிணத்தோம் போட்டாள்; ஒன்றும் நடக்கவில்லை.”

“அதுதான் அவள் அவனிடம் தோற்றுவிட்டாள்.”

“அதற்கப்புறம்?”

“இன்னொருத்தி வந்து மாட்டிக் கொண்டாள். குணமாலை. அவளை யானையின் பிடியிலிருந்து காப்பாற்றினான். அவன் அவள் பிடியில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் கட்டியங்காரன் அவன் மீது காழ்ப்புக் கொண்டான்; அவனைக் கட்டிப்பிடித்து வருக என்று கூறினான்.”

“அவன் தப்பித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்” என்று முடித்தான்.

அவன் பாடிய அந்தப்பாட்டைப் பாடமுடியுமா என்று கேட்டான்.