பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106சீவக சிந்தாமணி



“பாடுவேன்; இன்னமும் கூட்டம் வந்து கூடும்; மற்றும் இங்கே யாரும் பெண்கள் இல்லை என்று சொல்; பாடுகிறேன்” என்றான்.

“ஏன் அப்படி?”

“அவர்கள் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்; அப்புறம் அவர்களை அகற்ற முடியாது” என்றான்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனை ஏவலன் ஒருவன் வந்தான்.

“தங்கையை அரவு தீண்டிவிட்டது” என்றான்.

“அவள் மாண்டு விட்டாளா?” என்று கதறிக் கொண்டு ஓடினான்,

பிறகு தெரிந்தது அவள் உயிர் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று.

மந்திரம் மருத்துவம் அவளிடம் தோற்றுவிட்டன.

உலோகபாலனுக்கு ஒரு நினைவு ஓடியது; தன்னுடன் பேசியவன் கந்தருவனாக இருக்கலாம்; அவனுக்கு மந்திரம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்து அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவன் தங்கையைப் பற்றி ஏற்கனவே அவன் கேட்டு இருக்கிறான்; அவள் கொஞ்சம் அழகாகவே இருப்பாள் என்று வழியில் பேசக் கேட்டு இருக்கிறான்.

தான் ஒரு பெரிய மருத்துவன் போல் நடித்தான்; கையைப் பிடித்தான்; மார்பைத் தொட்டான்; கன்னத்தைக் கிள்ளினான்; விழிகள் மூடிக் கொண்டிருந்தன. “கன்னி நாகம் கடித்தது” என்றான்.

கன்னியை நாகம்தான் கடித்தது என்று மற்றவர்கள் உரைத்தார்கள்.