பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதுமையார் இலம்பகம்109
 


“முதலிலேயே சொல்லி இருக்கலாமே” என்றான்

“எதற்காக”

“"பாராட்டி இருக்க மாட்டேன்” என்றான்; அதன் நுட்பம் அரச இளைஞன் அறிந்து கொள்ள இயலவில்லை.

கதவு இடுக்குகள் எவ்வளவு பயன் உடையவை என்பதைக் கண்டு அவற்றைப் பயன் படுத்திக் கொண்டாள். தானே நேரில் சென்று “நான் தான் சமைத்தேன்” என்று கூறலாம் என்று துடித்தாள்; அரச மகள் என்பதால் அஞ்சி அடங்கினாள். அவனைத் தான் எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று துடித்தாள்.

அத்தான் என்று அழைக்க வேண்டும் என்று பித்தான நினைவுகள் அவளைக் கவ்வின. தன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு அவளே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் வேதனைப் பட்டாள்.

‘இதுவோ அன்னாய்! காமத்தியற்கை; புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்’ என்று தன் தோழியிடம் எடுத்து உரைத்தாள்.

அவனும் அவளைப் பற்றிப் பற்பல கற்பனைகளில் ஆழ்ந்தான். “காணி நிலம் வேண்டும். அங்கே ஒரு மாளிகை கட்டி முடிக்க வேண்டும். கீற்றும் இளநீரும் தரும் தென்னைகள் சுற்றியும் வைக்க வேண்டும். கத்தும் குயிலோசை காதில்பட வேண்டும். அங்கே இந்தப் பதுமம் பத்தினியாக வந்து தன் பக்கத்தில் இருக்க வேண்டும்” என்று கற்பனையில் ஆழ்ந்தான்.

நீலத் திரைக் கடலில் தன் மோனக் கனவுகளில் அவள் நீந்தி விளையாடுவதைக் கண்டான். கோல அழகுடைய அந்தக் கோயில் புறாவைப் பிடித்துக் கவிதைகள் சொல்லலாமே என்று ஆசைப்பட்டான்.