பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110சீவக சிந்தாமணி



“உயிர் கொடுத்தேன் என்பதற்காக அவள் உடலை நான் எப்படிக் கேட்க முடியும்? எந்த மாமன் மகனோ உறவு பேசி அவளை இழுத்துக் கொண்டு போனால் என்ன செய்வது?” முன்பின் தெரியாத உனக்கு எப்படி எங்கள் மகளைத் தர முடியும்? முகவரி இல்லாத மானாவாரி நீ; உனக்கு எப்படி எங்கள் மகளை வாரித் தர முடியும்? எப்படித் தாரை வார்த்துத் தரமுடியும் என்று முகம் திரித்துப் பேசினால் என்ன செய்வது?”

“அவள் மட்டும் விரும்பினால் போதுமா? அது போதும். அது முதற்படி, அதன்பின் எல்லாம் நடக்கும் அவள் சொற்படி, அதுதான் செய்யத்தக்க உருப்படி, நிச்சயம் உண்டாகும் சாகுபடி, அதற்குப் பிறகு நடப்பது விதிப்படி” என்று எண்ணியவனாய் அந்த ஊரில் ஒதுக்குப்புறத்தில் இருந்த ‘காதலர் சோலை’ என்ற பூஞ்சோலைக்குத் தனியனாகச் சென்றான்.

அவனுக்கு ஒரு நப்பாசை; அவளுக்கும் தன்னைப் போல் ஒரு தப்பாசை வந்து இந்தப்பக்கம் திருப்பு முனையாக ஆக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்காதா என்று அங்கலாயததான்.

மின்னல் கொடி ஒன்று கன்னல் மொழியாளின் வடிவத்தில் அவன் எதிர்பார்த்தபடியே வந்து நின்றது. அவளோடு வால் நட்சத்திரங்கள் போன்று அவள் தோழியர் உடன் வந்திருந்தனர்.

“பதுமையே! நாங்கள் அந்தப் பக்கம் சென்று ஏதாவது புதுமை இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்; நீ இங்கே சற்று இளைப்பாறுக, அதுதான் காதல் ஆறு; உன் தலைவனை நீ அடைந்து சேரு” என்று சொல்லிவிட்டு அவளை விட்டு ஒதுங்கி ஒரம் கட்டினர்.

“தமிழ்க் காதல்” என்ற நூலைப் படித்துச் சீவகன் இயற்கைப் புணர்ச்சி என்ற தலைப்பில் சுழன்று