பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10சீவக சிந்தாமணிஆட்சியில் செல்லவில்லை; அதனால் தன் நம்பிக்கைக்கு உரிய அமைச்சன் கட்டியங்காரனை விளித்துச் சிறிது காலம் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் தருவது என்று தீர்மானித்தான்.

கட்டியங்காரன் அழைப்பிக்கப்பட்டான். “நீ இதற்கு அட்டி ஒன்றும் கூறக்கூடாது” என்று முன்னுரை கூறினான்.

“அவ்வளவு மட்டி அல்ல நான்; நான்கு தலைமுறைகளாக அமைச்சியல் அறிந்த குடும்பத்தில் பிறந்தவன்; எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் தான் மெய்ப்பொருள் என்று சொல்லிப் பழகியவன் யான்; சொல்லுங்கள் கேட்கிறேன்” என்றான்.

“சுமை என்றாலும் அது அமையும் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஒய்வில் செல்ல விரும்புகிறேன். சாய்வதற்கு நீ உதவ வேண்டும்; நான் வந்து பொறுப்பேற்கும் வரை இந்த ஆட்சியை நீ ஏற்றுத் தாங்கி நடத்தவேண்டும்; நம்பிக்கை நட்சத்திரம் நீ; அதனால் தம்பி என உன்னை மதித்துத் தருகிறேன்; ஏற்று நடத்துக” என்றான்.

ஆட்சி அவனிடம் தரப்பட்டது. அவன் வேண்டா விருப்போடு பதவியை ஏற்றுக்கொண்டான். அந்தப் பூனை பால் குடிக்காது என்று நம்பினான். சச்சந்தனை இல்லற இன்பம் ஈர்த்தது; நாட்டின் நல்லறத்தை மறந்து விட்டான். தோள்வலி காட்டி ஆட்சியைச் சுமக்க வேண்டியவன் வளையலுக்கு வளைந்து தாழ்ந்து விட்டான்.

கதைகள் பல பேசினர்; விடுகதைகள் பல விடுத்து வினாக்கள் தொடுத்தனர். நாடகம் நயந்தனர்; இன்னிசைப் பாடல் கேட்டனர். அந்தப்புரத்தில் சுந்தரிகள் வந்து அவனைச் சந்தித்து அரசியைப் புகழ்ந்து வந்து உரையாடினர். சிலம்பு ஒலியும், வளையல் ஒலிகளும், மேகலை ஒலியும் செவிகளில் விழுந்து இனிய சங்கீதத்தைத் தந்தன.