பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120சீவக சிந்தாமணி“வாப்பா! எந்த ஊர்? புதுசு போல இருக்கு” என்றார்.

அவர் பேச்சே ஒரு தினுசாக இருந்தது. அவர்கள் சொல்லியபடி இவருக்கு ஒருமகள் இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

“உனக்குக் கலியாணம் ஆச்சா?” என்றார்.

ரொம்பவும் அநாகரிகமாக நடந்து கொண்டதுபோல் தோன்றியது. நடிகையை வயது கேட்பது போலவும், முதியவர்களைப் பார்த்து உடல் நலமா என்று அடிக்கடி விசாரிப்பது போலவும், புதிய மனிதரைச் சந்திக்கும்போது உன் வருவாய் என்ன என்பது போலவும் இந்த வினா இருந்தது.

அதற்கு அவன் பதில் சொல்லக் கடமைப்பட வில்லை. சிரித்துக்கொண்டான். அவரும் தொடர்ந்து அதைப் பற்றிக் கேட்கவில்லை.

வீட்டு முன்னால் ஒரு பாவை இருந்தது. உற்றுக் கவனித்தான்; அது அவர் மனைவி என்று தெரிந்தது; அந்த வீடு ஒரு ஓவியம் போல அழகாக இருந்தது. நூலைப் போலத்தான் சேலை என்ற பழமொழி அவனுக்கு நினைவு வந்தது. சில வீடுகளில் பெண் பார்க்கச் செல்கிறார்கள். மாமியாராக வருகிறவர்களைத் தவறாக மணப்பெண் என்று தான் கருதிவிட்டதாகச் சென்றவன் பேசிச் சிரித்து நகையாடுவது உண்டு. நிச்சயம் இவர் மகள் பேரழகி என்பதற்கு இவள் ஒரு முன்னறிவிப்பாக அமைந்தாள்.

வழக்கம் போல உணவு, விருந்து, பிறகு நாடகம்; பூச்சுமை ஒன்று முன் வந்து நின்றது. நாணத்தாலா அல்லது பூவின் சுமையாலா தெரியவில்லை; அவள் நாணித் தலைசாய்ந்தாள். நாணத்தில் ஏற்பட்ட மற்றைய கோணங்களை ரசித்தான்.

“என் மகள் இதுவரை யாரைக் கண்டும் வெட்கப்பட்டதில்லை” என்றாள் அவள்தாய்.