பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12சீவக சிந்தாமணி



விடுகிறது. அந்த இடத்தில் புதிய செடி ஒன்று முளைக்கிறது. அதன் தலை முடியில் எட்டு மாலைகள் விழுந்து அதை அழகு செய்கின்றன. இது நான் கண்ட கனவு” என்றாள்.

“பழமை அழிகிறது; புதுமை தோன்றி வளர்ந்து சிறப்படைகிறது. இதுதானே வாழ்க்கை நியதி” என்று விளக்கினான்.

“உங்களை இது எந்த அளவில் பாதிக்கும்?” என்று கேட்டாள்; அவளுக்கு மேலும் விளக்கம் தர அவன் விரும்ப வில்லை.

“கனவுகள் பலிப்பதும் உண்டு; பலிக்காமல் போவதும் உண்டு” என்று மழுப்பினான். “சோதிடம் போன்றதுதான் இது” என்று அமைதிப்படுத்தினான், நாட்கள் சென்றன; உழுதவன் நிலத்தின் விளைச்சலைக் காண்கிறான்; அவளோடு கழித்த நாட்கள் பழுது ஆகவில்லை; கன்னிமை கனிந்து தாய்மையாகிறது; பெண்மையின் உயர்வுக்குக் காரணமான தாய்மை அவளை வந்து அடைந்தது; வெறி கொண்டு விலங்காக வாழ்ந்தவன் நெறிகாண முயன்றான். புலன் இன்பம் நுகர்ந்தவன் தன் புலன் அறிவு செயல்படத் தொடங்கியது; அவள் உருமாற்றம் அவன் உள்ளத்தைத் திருத்தியது.

அவள் தோள்கள் மெலிந்தன; வாய் விளர்த்தது; கண் பசந்தது. முலைக்கண் கரிந்தது; செப்புப் போன்ற அவள் கொங்கை பால் சுமந்தது. இடை பருத்தது: சூல் உற்றாள்; அதனால் அவள் இள நலம் தொலைந்தது. அவனுக்கும் கவர்ச்சி குறைந்தது. அவள் வயிற்றை அவ்வப்பொழுது உதைத்து உயிர்த் துடிப்பைக் காட்டி வந்த மதலையின் எதிர்காலம் அவன் கண்முன் நின்றது.

கட்டியங்காரன் ஆட்சியைத் தராவிட்டால், எதிரியாக மாறிப் போர் தொடுத்தால் அந்த நினைவு அவனை அலைக்கழித்தது. தான் அழிந்தாலும் தன்