பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138சீவக சிந்தாமணி


சோலைக்கு நடுவே ஒரு குடில் தந்து ஆசிரம வாசியாக ஆக்கி வைத்தனர். அதுவும் அவனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பூவையர் அங்கு வராமல் இருக்கமாட்டார்கள். அவர்களுள் இந்தப் பாவையும் வரலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

இவனால் சும்மா இருக்க முடியவில்லை; அந்தத் தோட்டத்துப் பூக்களை நோட்டம் விட்டான்; அவற்றைப் பறித்து வைத்துச் செண்டுகளையும் மாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தான். சேடி ஒருத்தி அவனைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“பூந்தோட்டக் காவல் காரா” என்று பாடிக் கொண்டே அங்கே வந்தாள். அவள் தன்னைத் தான் விளிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.

“தங்கள் ஏவல் யாதோ?” என்றான்.

“இவ்வளவு அழகாகப் பூத் தொடுக்கிறாயே எப்படி?” என்று கேட்டாள்.

“பாவையர் பூச்சூடி வருவர். அவர்களைக் கவனிப்பதை விட இந்தப் பூக்களைத் தான் ரசிப்பேன், இராசமாபுரத்தில் காந்தருவ தத்தை என்ற வித்தியாதர மகள் இருக்கிறாள். அவள் சீவகனை மணந்தவள். அவன் என் அண்ணன் மாதிரி; அவளோடு அவள் தோழியர் பலர் வருவர். அவர்கள் வந்து என்னைச் சீண்டுவார்கள். நான் அவர்கள் சூடிய மலர்களைக் கீண்டுவேன்; அந்தப் பழக்கம்” என்றான்.

“என் தலைவி பூக்களை மிகவும் நேசிப்பாள்; அவளுக்குச் செண்டு கட்டித் தர முடியுமா?”

“இந்த அம்பிகாபதி பாமாலைகளைத் தொடுக்க அறியான்; பூமாலைகளைத்தான் தொடுப்பான்; அவற்றை நீ அவளுக்குப் பாமாலையாகக் கொடு” என்றான்.