பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகமாலையார் இலம்பகம்141“என் தந்தை அனுப்பிய வரிசைச் சீர்கள் எழுத்தில் அடங்கா; அவை அத்தனையும் வீட்டில் அடக்கி வைத்துள்ளேன்.

பொன்னும் மணியும் ஆடை புதிது அடுக்கியவை பலப்பல; கொண்டு வந்த ஆள் தரன்; அவனிடம் இங்கே நடந்தது எந்தச் செய்தியும் எடுத்துரைக்கக் கூடாது என்று அவனுக்கு எடுத்துச் சொல்லி இந்தக் குடும்பப் பெருமையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டேன்.

“கட்டியங்காரன் அட்டுழியங்கள் எதையும் எடுத்துக் கூறாதே; அது பழிப்பும் இழிப்பும் தரும் என்று அவனிடம் கூறி அனுப்பினேன்.”

“குணமாலையைத் தணிப்பது ஒரு தனிக்கலை; அவள் பிரிவிற்கு ஆற்றாள்.

இருள் நீடிக்கிறது என்பாள்; திங்களைக் கடிவாள்;

பகலே நீ சிறியை என்று அதனிடம் கொள்கிறாள் இகலே;

மேகலை தான் அணியாமல் “ஏன் ஏகலை” என்று எடுத்தெறிவாள்.

அணிகள் எதையும் அவள் அணுகுவது இல்லை; அணிகலம் இல்லாத இயல்புநவிற்சியே அவள்; அதுதான் கவிதைக்கு ஒரு தனி அழகு; இதுதான் உண்மை.

அவள் முகம் மதி என்று நீ புகழ்ந்து இருக்கிறாய்; அது மழையும் பொழிகிறது; காரணம் அவள் கூந்தல் மேகம் என்று நீ கூறியதால்.

மார்பில் முத்துக்கள் அணிவது இல்லை; அவள் கண்ணர்த் துளிகள் அவளுக்கு அழகிய முத்தாரம்.

கண்கள் கருங்குவளை என்பாய்; அவை கசங்கி இருக்கும்போது செங்குவளையாகிச் சிவந்து அரி பரந்து விழிக்கின்றன.