பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகமாலையார் இலம்பகம்145மாறிவிட்டது. அதைக் காக்கும் பொறுப்பு அவன் நண்பர்களுக்கு மிகுதியாகிவிட்டது.

அனைவரும் விசயையின் தவப்பள்ளியை அடைந்தனர். “செவ்வி அறிக” என்று செப்பிச் செல்வன் பது முகனை முன்னால் அனுப்பி வைத்தனர்; துறவிகள் குடில் என்பதால் அங்கே காவல் காக்கக் காவலர்யாரும் நிறுத்தி வைக்கப்படவில்லை. எனினும் அமைதியே அந்தச் சூழ் நிலையைக் காத்து வந்தது.

அன்புக்கடல் இரண்டும் சங்கமம் ஆகும் சந்திப்பை அவர்கள் கண்டனர். பேழையில் விட்டது பெரும் பிழை அல்ல என்று குந்தி தேவி அறிந்தாள்; தன் முன் ஏழ்மையைக் காணவில்லை; தோழமை மிக்க இளைஞருடன், சீவகன் நிற்பதை விசயமாதேவி கண்டு மகிழ்ந்தாள்.

கட்டியங்காரன் பாண்டியன் நெடுஞ்செழியன் அல்ல; கண்ணகியாக நின்று வழக்காட, அதனால் அவள் ஆறி அடங்க வேண்டியதாக ஆயிற்று, நீறு பூத்த நெருப்பாக இருந்தாள். பெற்ற மகனைப் பெரியோன் ஆக்கினாள். அவனை வைத்துக் கொடியோனை ஒழிக்க உருவாக்கிக் கொண்டாள். எனவே அவனைப் பார்த்தபோது கொள்ளி வைக்க ஒரு மகன் கிடைத்தான் என்று பெருமகிழ்வு கொண்டாள்; தனக்கு அல்ல; தன் பகைவன் கட்டியங்காரனுக்கு.

காதல் திருமகளாகக் காட்சி தந்து சச்சந்தன் ஆட்சி யின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவள் வீரத்திருமகளாக மாறினாள். கண்ணகி போல கொதித்து எழாவிட்டாலும் சாணக்கியனைப் போல அறிவோடு பேசினாள்; அறிவின் சிகரத்தை அவள் எட்டிப் பிடித்தாள்.

கன்னனைக் கண்ட குந்தியின் தனங்களில் தாய்மை முதிர்ந்து நனைத்தது. தாய்மை அவனைத் தாலாட்டியது. அன்பு மழையில் சீவகன் நனைந்து விட்டான். தாய்ப் பசுவை முட்டிப் பால் அருந்தும் பசுங்கன்று ஆனான்;