பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146சீவக சிந்தாமணி


குழைந்தான்; மனம் விழைந்தான் “அம்மா” என்று இனிய கீதம் அவன் நாதத்தில் எழுந்தது.

முதலில், சோகத்திலேயே அவள் சுயசரிதம் தொடங்கினாள்.

“வாள் ஏந்திய மன்னனைக் களத்தில் இழந்தேன்; காட்டிலே உன்னை உய்த்தேன்; நான் பிறப்பால் என் செய்கையால் கயமை அமையவில்லை. சூழ்நிலை என்னைக் கயத்தி என்று பேசும்படி ஆக்கிவிட்டது.

பெற்றவள் பாசம் இன்மையால் உன்னைத் துறக்க வில்லை; கற்றவர் கையில் நீ சென்று உற்ற கலைகளை அறிந்து வீரத்திருமகனாக வளரவேண்டும் என்று பிரிந்தேன்; நற்றவம் நாடி நற்பேறு அடைய இத் தவப் பள்ளியை யான் நாடவில்லை; காலம் வரும்வரை காத்திருப்போம் என்றுதான் இந்தச் சூழ்நிலையை நாடினேன். எனக்கு இது ஆறுதல் இல்லமாக அமைந்தது.

என் வாழ்க்கை இரண்டும் கெட்ட நிலையில் ஆகி விட்டது. பகையையும் முடிக்கவில்லை; என் வாழ்நாள் மிகையையும் முடிக்கவில்லை. செய்வது யாது? வகை தெரியாது தவிக்கின்றேன். இடை மகன் வெட்டிப் போட்ட பச்சைமரம் என் வாழ்க்கை; அது சாகவும் செய்யாது; தழைக்கவும் செய்யாது” என்று கூறினாள்.

ஊர்வசியாக இராசமாபுரத்து அந்தப்புரத்தில் அடி யெடுத்தவள் தவசியாக இங்கே இருந்து அறிவுரை கூறி னாள். அரசு பின்னணியும், தவத்தின் அறிவு மாட்சியும் இயைந்து அவளை ஒரு ராஜரிஷியாக ஆக்கியது கண்டு வியந்தான்.

அவள் அறிவுரைகள் ஒவ்வொன்றும் முத்துகளாக ஒளி விட்டன.