பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160சீவக சிந்தாமணிவந்தவன் யாரோ மந்திரவாதி என்று அங்கு இருந்தவர் பேச ஆரம்பித்தனர்; அவன் அவளுக்கு வெறி ஏற்றி விட்டான்; அவன் சாம்புராணி புகைபோடும்போதே தெரியும். இவளை ஆட்டி வைக்கப் போகிறான் என்று, சீவகனை மறந்து அவன் காற்றுப்படக்கூடாது என்று சன்னலை அடைத்துக் கொண்டவள் வெட்ட வெளியில் ஒட நினைக்கிறாள்; விட்டால் துணிகளைக் கிழித்துக் கொள்வாள்போல இருக்கிறது.

காமன் கோயிலுக்குச் செல்ல மறுத்தவள் அங்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துவதைக் கண்டு வியப்பு அடைந்தனர்; மணிமேகலைபோல அட்சயபாத்திரம் ஏந்தி ஆருயிர்க்கெல்லாம் இரங்கி மாபெரும் துறவியாவாள் என்று எதிர்பார்த்தனர். ஆட்டனத்தியை நினைத்து அலமந்த ஆதிமந்தி போலப் பேதுறுவது வியப்பைத் தந்தது.

ஆட்டன் அத்தி என்பவன் சிறந்த ஆடற்கலைஞன்; அவனைக் காதலித்தவள் ஆதிமந்தி என்ற அழகி, அவனைக் கடல் அலைகள் அடித்துக் கொண்டு போக அவனை நினைத்து அழுது அரற்றித் தெய்வத்திடம் முறையிட்டு அவனைத் திரும்பப் பெற்றாள் என்பது கதை; அத்தகைய ஆதிமந்தியின் நிலையை இவள் அடைந்துவிட்டாள் என்று தோழியர் பேசிக் கொண்டனர்.

எப்படியோ இவள் காமன் கோயிலுக்குச் செல்லப் போகிறாள் என்ற செய்தி பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிய அவர்கள் அன்றைய காலை ஏட்டில் இச்செய்தியை வெளியிட்டு விடவே மாலையில் சாலை இருபுறமும் தலைவர்களைக் காண நிற்கும் கட்சித் தொண்டர்களைப் போல இளைஞர்கள் அழகாக உடுத்திக்கொண்டு அங்கங்கே இடம் பிடித்து நின்றனர். சிலர் இடம் இல்லாமல் போகவே மரத்தில் ஏறிக் குரங்குகள் ஆயினர்; அவர்களுள் ஒருவனுக்குத் தவறி விழுந்து அடிபட்டது என்ற செய்தி மறுநாள் வந்தது.