பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172சீவக சிந்தாமணி



உனக்குக் காண்டீபம் எதற்கு” என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டான்.

தன்னை இகழ்ந்தாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான்; தன் வில்லை இகழ்ந்தது அவனால் பொறுக்க இயலவில்லை.

உடனே வில்லின் அம்பு குறி வைக்கத் தருமன் மீது பாய்ந்தான்.

கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். இது பாரதக் கதை.

அதே வேகம் சீவகனுக்கு வந்துவிட்டது.

“இப்பொழுது சொல் அந்தக் கட்டியங்காரன் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்” என்று முழக்கம் செய்தான்.

“அந்த வீரத்தைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்; அவசரப்படுவதில் பயனில்லை.”

“என் மகளை உனக்கு மணம் முடிக்க விரும்பவில்லை;” என்றான்.

ஆறியவன் சீறும் நிலையில் நின்றான்.

அவள் நினைவுகள் பழமைக்குச் சென்றன.

சின்ன வயதில் யாராவது நீ யாரைக் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்று அவளைக் கேட்டால் ‘மாமன் மகனை’ என்று மனப்பாடம் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்று பொம்மை வைத்து விளையாடிய நாட்களில் அந்தப் பொய்மை வடிவங்களில் ஒன்றில் தன்னை வைத்துக் கண்டாள். மற்றொன்று சீவகனை வரித்தாள். அவள் தாவணிக் கனவுகளில் அவனைத் தவிர வேறு யாரும் இடம் பெற்றதில்லை.